தாம்பரம் நகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் போராட்டம்

தாம்பரம் நகராட்சியில் சிப்பம் முறை டெண்டர் தங்களை பாதிப்பதாகக் கூறி ஒப்பந்ததாரர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தாம்பரம் நகராட்சியில் சிப்பம் முறை டெண்டர் தங்களை பாதிப்பதாகக் கூறி ஒப்பந்ததாரர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தாம்பரம் நகராட்சியில் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.15 கோடிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.
மத்திய வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 7.5 கோடியும் தாம்பரம் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 7.5 கோடியும் ஒதுக்கி மேற்கொள்ளவிருக்கும் இப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் தகுதியான ஒப்பந்ததாரர்களிடமிருந்து தாம்பரம் நகராட்சி சார்பில் கோரப்பட்டது.
ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைச் சேர்த்து சிப்பமாக மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதால், தாம்பரம் நகராட்சியில் பதிவு செய்துள்ள 60-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தாம்பரம் நகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை திரண்ட ஒப்பந்ததாரர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் டெண்டர் கோரப்பட்டு இருப்பதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நகராட்சிக்கு வந்த தாம்பரம் போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து தாம்பரம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் பஞ்சாட்சரம் நிருபர்களிடம் கூறியது: தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகளுக்கான டெண்டரை தாம்பரம் நகராட்சியில் பதிவு செய்துள்ள ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் உள்நோக்கத்துடன் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
சிப்பம் முறையில் ஒன்றிணைத்து, பெரும்தொகைக்கான பணியாக உயர்த்தி வேறு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பதில் அக்கறை செலுத்துவதில் லஞ்சம், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகள் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளதுஎன்றார். இதுகுறித்து தாம்பரம் நகராட்சிப் பொறியாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, தாம்பரம் நகராட்சி சார்பில் கோரப்பட்டுள்ள டெண்டரில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ 1 கோடி மதிப்பில் வேலை செய்யத் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள்தான் டெண்டரில் பங்கேற்க முடியும். தாம்பரத்தைச் சேர்ந்த தகுதியுள்ள ஒப்பந்தக்காரர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com