காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: ராஜஸ்தான் எஸ்.பி. தரும் அதிர்ச்சித் தகவல்

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் சென்ற மற்றொரு ஆய்வாளரின் துப்பாக்கிக் குண்டு எதிர்பாராமல் பாய்ந்து பெரியபாண்டியன் இறந்தாரா எனக் கேள்வி
காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: ராஜஸ்தான் எஸ்.பி. தரும் அதிர்ச்சித் தகவல்

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் சென்ற மற்றொரு ஆய்வாளரின் துப்பாக்கிக் குண்டு எதிர்பாராமல் பாய்ந்து பெரியபாண்டியன் இறந்தாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. இது தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கொளத்தூர் நகைக் கடையில் 3.5 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். 
அங்கு பாலி மாவட்டம் ஜெய்புத்ரன் அருகே ராம்வஸ் என்ற இடத்தில் தனிப் படையினர் முக்கியக் குற்றவாளியான நாதூராமை கடந்த புதன்கிழமை கைது செய்ய முயன்றனர். 
அப்போது தனிப்படையைச் சேர்ந்த மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தனிப்படையில் இருந்த மற்றொரு காவல் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து பெரியபாண்டியன் உடலில் குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது.
ஒரு குண்டு இல்லாமல்...இதை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவ இடத்தில் ராஜஸ்தான் போலீஸார் நடத்திய சோதனையில், கீழே கிடந்த முனிசேகரின் துப்பாக்கியைக் கைப்பற்றினர். அதில் ஒரு குண்டு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
தடய ஆய்விலிருந்து...முனிசேகரின் துப்பாக்கியை ராஜஸ்தான் காவல்துறை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது தொடர்பாக பாலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவ், தடயவியல் ஆய்வில் முனிசேகர் துப்பாக்கியில் இருந்த குண்டுதான், பெரியபாண்டியனின் உயிரைப் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. 
பெரியபாண்டியனுடன் வந்த மற்றொரு தமிழக காவல் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி விசை எதிர்பாராமல் அழுத்தப்பட்டு, குண்டு பாய்ந்ததாக தடயவியல் துறையின் முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முழுமையான அறிக்கை கிடைத்த பிறகே, இது தொடர்பாக காவல் ஆய்வாளர் முனிசேகரிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.
திடீர் திருப்பம்: இது வரை கொள்ளையர்களே பெரியபாண்டியனை சுட்டதாகக் கருதப்பட்டு வந்த நிலையில், அவருடைய மரணத்துக்கு காவல் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு காரணமாக இருக்கலாம் என்ற தகவல் சென்னை காவல் துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com