மருத்துவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய உறவினர் கைது

சென்னை கொளத்தூரில் மருத்துவரை கொலை செய்து தண்ணீர்த் தொட்டியில் உடலை வீசியதாக அவரது உறவினர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூரில் மருத்துவரை கொலை செய்து தண்ணீர்த் தொட்டியில் உடலை வீசியதாக அவரது உறவினர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

கொலையான மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு திங்கள்கிழமை (ஜூலை 3) திருமணம் நடைபெறவிருந்தது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (26) முகப்பேரில் கிளினிக் நடத்தி வருகிறார்.
இவரது தந்தை நாகராஜன் அங்கு மருந்துக்கடை வைத்துள்ளார். நாகராஜனுக்கு ராஜேந்திரன் என்ற அண்ணன் உள்ளார். அவர் தனது குடும்பத்துடன், நாகராஜன் வசிக்கும் வீடு அமைந்திருக்கும் வளாகத்திலேயே வசித்து வந்தனர்.
இந்தநிலையில், மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு திங்கள்கிழமை (ஜூலை 3) திருமணம் நடைபெறவிருந்தது. நாகராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் சில நாள்களுக்கு முன் அவர்களது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்துக்குச் சென்றிருந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் 29}ஆம் தேதி காலை வீட்டிலிருந்த அண்ணன் ராஜேஷ்குமாரை காணவில்லை என்று அவரது தங்கை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பாவிடம் கூறினார். பல இடங்களில் தேடியும் ராஜேஷ்குமார் கிடைக்காததால் இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், மறுநாள் (ஜூன் 30) காலை ராஜேஷ்குமார் வீட்டின் முன்பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகத்தின்பேரில், அதன் மூடியை திறந்து பார்த்தபோது, அதில் ராஜேஷ்குமார் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜேஷ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 3 தனிப்படைகளை அமைத்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ்குமாரின் பெரியப்பாவின் (ராஜேந்திரன்) மகன் மகேந்திரனை காணவில்லை. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை வில்லிவாக்கம் அருகே போலீஸாரிடம் மகேந்திரன் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள்:-
மகேந்திரன் தந்தையான ராஜேந்திரன் மூலம் நாகராஜன் வங்கியிலிருந்து ரூ.35 லட்சம் கடன் பெற்றார். அந்தப் பணத்தை நாகராஜன் வங்கியில் முறையாகச் செலுத்தாததால் ராஜேந்திரன் செலுத்தி வந்துள்ளார். மேலும் ராஜேஷ்குமார்} மகேந்திரன் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே ராஜேஷ்குமார் கடந்த ஜூன் 29}ஆம் தேதி மகேந்திரனுடன் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் மது குடித்துள்ளார். பின்னர் மாடிப்படியில் இருந்து இறங்கி வரும்போது ராஜேஷ்குமார் மகேந்திரனின் மனைவியை பற்றி அவதூறாக பேசினாராம். இதையடுத்து மகேந்திரன் ஆத்திரத்தில் ராஜேஷ்குமாரை கையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து அதில் ராஜேஷ்குமாரின் உடலை போட்டுவிட்டு தலைமறைவானதாக போலீஸாரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மகேந்திரனை(36) போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com