சென்னையில் 5,000 திருட்டு சி.டி. பறிமுதல்: 6 பேர் கைது
By DIN | Published on : 18th July 2017 04:44 AM | அ+அ அ- |
சென்னை முழுவதும் போலீஸார் திங்கள்கிழமை நடத்திய திடீர் சோதனையில் 5 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
திருட்டு சி.டி.க்களினால் திரைப்படத்துறை பல நூறு கோடி நஷ்டமடைந்து வருவதால், அதை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னைப் பெருநகர காவல்துறையின் திருட்டு சி.டி. ஒழிப்புப் பிரிவு போலீஸார், நகர் முழுவதும் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
பர்மா பஜார், தியாகராயநகர், அண்ணாநகர், அமைந்தகரை,அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி என பல்வேறு பகுதிகளில் சி.டி. கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் அண்மையில் வெளியான புதிய தமிழ் திரைப்படங்களின் சுமார் 5 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது தொடர்பாக போலீஸார் 6 பேரைக் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.