சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டது

சென்னை நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி வறட்சியின் காரணமாக கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாக வறண்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டது

சென்னை நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி வறட்சியின் காரணமாக கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுமையாக வறண்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் உள்ளன.
பருவ மழை மிகக் குறைந்தளவே பெய்தததால் 4 ஏரிகளிலும் நீரின் அளவு அடியோடு குறைந்துவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய மூன்று ஏரிகளிலும் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 111 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமை (ஜூலை 17) புழல் ஏரியும் முழுமையாக வறண்டது.
மணல் மேடாக...: 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி முற்றிலும் வறண்டு ஜீரோ மில்லியன் கன அடியைத் தொட்டது. இதனால் ஏரிப்பகுதி முழுவதும் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 13 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வறண்டுள்ளது. ஜீரோ மில்லியன் கன அடிக்குக் கீழே தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 87 மில்லியன் கன அடி, பூண்டி ஏரியில் 21 மில்லியன் கன அடிஎன தற்போது 108 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த நான்கு ஏரிகளிலும் சேர்த்து 3,757 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடும் குடிநீர் தட்டுப்பாடு: ஏரிகளில் நீரின் அளவு வெகுவாகக் குறைந்து விட்டதால் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க சென்னைக் குடிநீர் வாரியம் கல்குவாரி நீர், போரூர் ஏரி நீரை சுத்திகரித்து வழங்கி வருகின்றனர். எனினும் நகரின் பல இடங்களில் தண்ணீருக்காக பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில் செம்பரம்பாக்கம் ஏரியில் 87 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதால் அதிலிருந்து மட்டும் சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த வாரம் பெய்த மழையால் ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியில் 17 மில்லியன் கனஅடி தண்ணீர் அதிகரித்திருந்தது. மீண்டும் மழை பெய்தால் மட்டுமே சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com