போலியாக மாதாந்திர பயணச்சீட்டுகளை அச்சிட்டு மோசடி

சென்னையில் அரசு பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டுகளை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அரசு பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டுகளை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதனிடம் அளித்த புகார் விவரம்:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகளின் நலன் கருதி பல்வேறு பயணச் சலுகை சீட்டுகளை சென்னையில் 29 மையங்களில் விற்பனை செய்கிறது.
இதில் ரூ.1000க்கு விற்கப்படும் மாதாந்திர பயணச்சீட்டுகள் சில போலி என்று தெரியவந்தது. இம்மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு, விசுவநாதன் உத்தரவிட்டார்.
போலி மாதாந்திர பயணச்சீட்டுகள், அண்ணாநகர், திருவான்மியூர், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் விற்கப்படுவவை போலீஸார் கண்டறிந்து அங்குள்ள ஊழியர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
5 பேர் கைது: இம்மோசடி தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஆதம்பாக்கம் பணிமனை கணக்காளர் கிருஷ்ணகுமார் (41), திருவான்மியூர் பணிமனையில் பயண அட்டைகளை விற்பனை செய்யும் ம.ஜெகதீஷ் (34), அண்ணாநகர் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனையாளர் தி.பிரகாஷ் (45), அண்ணாநகர் பணிமனை கணக்காளர் து.சுரேஷ்குமார் (43), அவருடைய நண்பர் திருத்தணி கொல்லக்குப்பம் ரமேஷ்பாபு (32) ஆகிய 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
இம்மோசடியில் ஈடுபட்டவர்கள், தனித்தனியாக இரு கும்பலாகச் செயல்பட்டுள்ளனர். ஒரு கும்பல் ஆதம்பாக்கம் கணக்காளர் கிருஷ்ணகுமார் தலைமையிலும், மற்றொரு கும்பல் கொல்லக்குப்பம் ரமேஷ்பாபு தலைமையிலும் செயல்பட்டனர். இதில் கிருஷ்ணகுமார், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் அப்துல்ரசாக் என்பவரிடம் கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை ரூ.2.5 லட்சத்துக்கு வாங்கி, அதன் மூலம் போலி மாதாந்திர பயணச்சீட்டை தயாரித்திருக்கிறார். போலி பயணச்சீட்டை ஆதம்பாக்கத்தில் கிருஷ்ணகுமாரும், திருவான்மியூரில் ஜெகதீஷும் விற்றுள்ளனர். இவ்வாறு ஒரு மாதத்துக்கு 200 போலி பயணச்சீட்டு அட்டைகளை அவர்கள் விற்றுள்ளனர்.
திருத்தணியில் தயாரானது: அண்ணாநகர் பணிமனைக் கணக்காளர் சுரேஷ்குமாரும், கொல்லக்குப்பம் ரமேஷ்பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இதில் ரமேஷ்பாபு,போலி மாதாந்திர பயணச்சீட்டு தயாரித்து விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என சுரேஷ்குமாருக்கு யோசனை கூறியுள்ளார். பண ஆசையால் சுரேஷூம் அதற்கு சம்மதித்துள்ளார்.
இதையடுத்து ரமேஷ், சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் உள்ள ஒரு கடையில் கலர் பிரிண்டர், ஸ்கேனர், லேமினேஷன் இயந்திரம் ஆகியவற்றை வாங்கி, திருத்தணி அருகே உள்ள ஒரு வீட்டில் வைத்து போலி பயணச்சீட்டுகளைத் தயாரித்துள்ளார். இவற்றை சுரேஷும், மாதாந்திர பயணச்சீட்டு விற்பனையாளர் பிரகாஷூம் பயணிகளிடம் விற்பனை செய்திருக்கின்றனர். இதில் ஒரு சீட்டுத் தயாரித்துக் கொடுப்பதற்கு ரமேஷ், சுரேஷிடமிருந்து ரூ.200 பெற்றுள்ளார். இந்த மோசடியின் மூலம் போக்குவரத்துக் கழகம் பல கோடி நஷ்டமடைந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரு ஆண்டுகளாக நடைபெற்ற மோசடி

மாதாந்திர பயணச்சீட்டு மோசடி இரு ஆண்டுகளாக நடைபெற்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த மே மாதம் சந்தேகத்துக்குரிய சில மாதாந்திர பயணச்சீட்டுகளை பேருந்து நடத்துநர்கள் கண்டுபிடித்தனர். அவை மிகவும் வித்தியாசமாக இருந்ததால், அவற்றை போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள், அதை ஆய்வு செய்ததில் அவை போலியானவை என்பது தெரியவந்தது.உடனடியாக இதுகுறித்து அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்தபோது, போலி பயணச்சீட்டு அட்டைகள் திருவான்மியூர், அண்ணாநகர், ஆதம்பாக்கம் பணிமனைகளில் விற்பனையாவது தெரியவந்துள்ளது. அதன் பின்னரே அதிகாரிகள், காவல்துறையில் புகார் செய்துள்ளனர். காவல்துறை விசாரணையில் இரு ஆண்டுகளாக இந்த மோசடி நடைபெற்றிப்பது தெரியவந்தது. இது போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com