இறைவன் கொடுப்பதை இல்லாதவர்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும்: நீதிபதி அக்பர் அலி

இறைவன் கொடுக்கும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை இல்லாத அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நீதிபதி அக்பர் அலி கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தினமணி ஈகைப்பெருநாள் மலர் 2017 வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) சர்ஃப்ராஸ் அகமது, முனைவர் ஜெ.ஹாஜாகனி,  காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், நீதிபதி ஜி.எம்.அக்பர் அ
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தினமணி ஈகைப்பெருநாள் மலர் 2017 வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) சர்ஃப்ராஸ் அகமது, முனைவர் ஜெ.ஹாஜாகனி, காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், நீதிபதி ஜி.எம்.அக்பர் அ

இறைவன் கொடுக்கும் விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை இல்லாத அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என நீதிபதி அக்பர் அலி கூறினார்.

"தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2017' வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
"தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நீதிபதி அக்பர் அலி மலரை வெளியிட, கவிஞர் மு.மேத்தா பெற்றுக் கொண்டார்.
விழாவில், நீதிபதி அக்பர்அலி பேசியது: இந்த மலரில் இஸ்லாமியம் குறித்து மிகச் சிறப்பான விஷயங்கள் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மூலம் கூறப்பட்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய கட்டுரையில், ஒவ்வொரு ஆண்டும் இப்ஃதார் நோன்பில் கலந்து கொள்வதற்கு முன்பு, அவர் நோன்பு மேற்கொண்டு வருவதும், இதை அவர் 13 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் பொருளாதார சமநிலை குறித்து எழுதிய கட்டுரையில், ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் ஜகாத் குறித்து கூறியிருக்கிறார். அப்போது,"இறைவன் அனைவருக்கும் சமமாகக் கொடுப்பதில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் கொடுப்பார். மனிதன்தான் அதை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என்பதை நபிகள் நாயகத்தின் கதை மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.
எனவே, இறைவன் கருணையால் அதிகப் பொருள்கள் வைத்திருப்பவர்கள் அதை இல்லாத ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். அதுதான் ஜகாத் என்றார்.
கவிஞர் மு.மேத்தா: அப்துல்ரகுமான் என்ற கவிஞனுக்கு முஸ்தபா என்ற ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்தான் இந்த கவிக்கோ அரங்கம். அதேபோன்று ஈகைப் பெருநாள் மலர் மூலம் "தினமணி' நாளிதழ், தமிழுக்கு ஒரு தாஜ்மகால் கட்டியிருக்கிறது. இனத்தால் வேறுபட்டிருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்கும் பணி, சிந்தனையாளர்கள், கவிஞர்கள், ஊடகங்களுக்கு உள்ளது. இதுபோன்ற பணிகள் மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அனைவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் உலகத்தின் சிறந்த பண்பு ஆகும்.
தாவூத் மியாகான்: ஈகைப்பெருநாள் மலர் மற்ற மலர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எந்த மலரிலும் கூறப்படாத செய்திகளும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், சிறுகதைகள் என வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் பல விஷயங்கள் "தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பெற்றுள்ளன.
கடந்த இரு ஆண்டுகளாக என்னைச் சந்திக்க வருவோரிடம் இந்த மலரை (ஈகைப் பெருநாள் மலர்) நான் அன்பளிப்பாக வழங்கி வருகிறேன். இஸ்லாமிய மக்களுடன் பிற மக்களை ஒருங்கிணைக்கும் விதமாக ஈகைப் பெருநாள் மலரை வெளியிட்டு வரும் "தினமணி' நாளிதழுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முனைவர் ஹாஜாகனி: இது இஸ்லாமியம் குறித்து மட்டும் சொல்லக்கூடிய புத்தகம் அல்ல. அத்துடன் நாட்டின் இன்றைய நிலை, காலத்தின் தேவை குறித்த விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.
"திருக்குறள் சௌதி அரேபியாவில் அரங்கேற்றப்படுகிறது' என்ற பேராசிரியர் ஜாகீர் ஹூசைன் எழுதிய கட்டுரை, "இஸ்லாமியம் ஏன் தவறாகச் சித்திரிக்கப்படுகிறது, அதற்கான காரணம் என்ன?' என குலாம் முகமது எழுதிய கட்டுரை என அனைத்து தகவல்களுமே பயனளிக்கக் கூடியவை. இதில் உள்ள விஷயங்கள் இதுவரை எந்தப் பத்திரிகைகளிலும் வந்ததில்லை என்றார்.
இந்த விழாவில் கல்வியாளர் ஜலால், "வெல்ஃபேர் பார்ட்டி' தலைவர் எஸ்.சிக்கந்தர், சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த இதழாளர் ஜாஃபர் ரஹ்மானி, மந்தைவெளி பள்ளிவாசல் தலைமை இமாம் இல்லியாஸ் ரியாஜி, யுனிவெர்சல் பதிப்பக உரிமையாளர் ஷாஜகான், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் சே.மு.முகமது அலி, "வைகறை வெளிச்சம்' இதழ் ஆசிரியர் குலாம் முகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


சகிப்புத்தன்மை அல்ல இணக்கத்தன்மை!: "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்


"சமுதாயத்தில் தேவை இணக்கத்தன்மையே தவிர சகிப்புத்தன்மை அல்ல' என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "தினமணி' ஈகைப் பெருநாள் 2017 மலர் வெளியீட்டு விழாவில் "தினமணி'ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது:
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் படித்து அந்த மதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் ஈகைப் பெருநாள் மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் எத்தனை பேர் இந்த மலரைப் படிக்கிறார்கள் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
சகிப்புத்தன்மை இல்லை என்று பரவலாகப் பேசப்படுகிறது. சகிப்புத்தன்மை என்கிற வார்த்தையே தவறானது. நமக்குப் பிடிக்காத, நாம் ஏற்றுக் கொள்ளாத ஒன்றை சில நிர்பந்தங்களுக்காக ஏற்றுக்கொள்வதுதான் சகிப்புத்தன்மை. கருத்து வேறுபாடுகளைப் புரிதலுடன் ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்குமே தவிர சகித்துக் கொள்வது அல்ல. தேவை இணக்கத்தன்மை அல்லது ஏற்றுக் கொள்வதே தவிர சகிப்புத்தன்மை அல்ல.
நாம் அனைவருமே தாற்காலிக விசாவில்தான் இந்தப் பூவுலகுக்கு வந்திருக்கிறோம். நிரந்தரமாக யாரும் இங்கே வாழ்ந்துவிடப் போவதில்லை. அந்த உரிமை யாருக்கும் தரப்படவில்லை. அது குறித்த புரிதல் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். மதம், இனம் போன்றவை நாம் கேட்டு வாங்கியதோ, விண்ணப்பித்துப் பெற்றதோ அல்ல. இதை நாம் உணர்ந்தால் அடுத்தவர்களின் உணர்வுகளையும், வாழ்க்கை முறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வந்துவிடும்' என்றார் தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com