பிரச்னைகளின் பிடியில் காசிமேடு மீன்பிடித் துறைமுகம்

ஆர்.கே.நகர் தொகுதியில் அமைந்துள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பல்வேறு பிரச்னைகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம்.

ஆர்.கே.நகர் தொகுதியில் அமைந்துள்ள காசிமேடு மீன்பிடித் துறைமுகம் பல்வேறு பிரச்னைகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இப்பிரச்னைகளைத் தீர்க்க இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளை இப்பகுதி மீனவ மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
ராயபுரம் தொகுதியில் முன்பு இடம்பெற்றிருந்த காசிமேடு பகுதி, தொகுதி மறுசீரமைப்பின்போது ஆர்.கே.நகரில் இணைக்கப்பட்டுவிட்டது. இங்குள்ள மீன்பிடித் துறைமுகம்தான் இப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் துறைமுகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1 லட்சம் பேரின் வாழ்வாதாரம்: ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் டன் கடல் மீன்வகைகள் இத்துறைமுகத்தில் பிடிக்கப்படுகின்றன.
படகு உரிமையாளர்கள், மீன்பிடிப்பவர்கள், மொத்த வியாபாரிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், மீனவ பெண்கள், தச்சர்கள், மெக்கானிக்குகள் என சுமார் 1 லட்சம் பேர் இங்கு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 45 நாள்கள் மீன்பிடி தடைகாலம் தவிர்த்து, ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் துறைமுகத்தில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும்.
கட்டமைப்பு வசதிகள் இல்லை: இத்தகைய தொழில் முக்கியத்துவம் வாய்ந்த இத்துறைமுகத்தில், படகுகளை கரையிஸ் ஏற்றி பராமரிப்பு பணிகளை செய்வதற்கான சாய்வு தளத்துடன்கூடிய பட்டறைகள் இல்லை. மேலும், மீன்களைப் பதப்படுத்தும் வகையில் குளிரூட்டும் கட்டமைப்பு கொண்ட நவீன வசதிகள் இல்லை.
அத்துடன், துறைமுகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. கருவாட்டிற்காக மீன்களை காயவைக்க போதுமான இடவசதிகள் இல்லை. இதனால் மணலில்தான் மானாவாரியாக மீன்கள் கொட்டப்படுகின்றன. மீன் கழிவுகளும் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
திறக்கப்படாத ஏலக் கூடம்: முன்பிருந்த மீன் ஏலக் கூடம் சுனாமியின்போது சேதமடைந்தததால் புதிய ஏலக்கூடம் சுமார் ரூ.40 கோடி செலவில் மீன்வளத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன்கூடிய ஏலக்கூடம் அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.
படகு தளத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஏலக்கூடத்திலிருந்து மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகளின் மீன் கிடங்குகள், தற்போதைய இடத்தைவிட சற்று தொலைவில் உள்ளதுதான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இப்பிரச்னையால், துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின்கீழ் மீன்பிடித்துறைமுகத்திற்குள் பாலம் அமைக்கும் பணி முடங்கியுள்ளது.
இதர கோரிக்கைகள்: இது தவிர, மீன்பிடித்துறைமுகத்திற்கு வரும் வேன், லாரி, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை.
தற்போது அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடமும் திறக்கப்படாமல் வலை பின்னும் இடமாக மாறிவிட்டது.ற
திறன்வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை, சுகாதாரத்துடன்கூடிய உணவகங்கள், மீன்களை சில்லறை விலைக்கு விற்பனை செய்ய குளிரூட்டும் வசதிகளுடன் கடைகள், படகு உரிமையாளர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிக்க வங்கிக் கிளை என பல கோரிக்கைகள் இப்பகுதி மக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளிக்கப் போகிறார்கள் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.


தமிழக அரசே கையகப்படுத்த வேண்டும்

எம்.இ.ரகுபதி (தலைவர், சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கம்):
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் தற்போது சென்னைத் துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மீன்வளத் துறையால் எவ்வித வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடிவதில்லை. எந்தப் பிரச்னை என்றாலும் சென்னைத் துறைமுக அதிகாரிகள் மூலம்தான் தீர்க்க முடியும். அவர்களைப் பொருத்தவரை மீன்வர்களின் நலன் என்பதும், மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது என்பதும் தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. எனவே நாட்டின் இதர மீன்பிடித் துறைமுகங்களைப் போல காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தையும் மாநில அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும்.
எம்.டி.தயாளன் (நிறுவனர், இந்திய மீனவர் சங்கம்): மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள காலி நிலங்கள் அனைத்தும் மீன்பிடித் தொழில் தொடர்புடைய பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், சென்னைத் துறைமுக அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளால் தற்போது இத்தொழிலுக்குத் தொடர்பில்லாத பல்வேறு நிறுவனங்கள், கடைகள் வளாகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இது மீனவர்களின் நலனையும், மீன்பிடித் துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சியையும் பாதிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com