திடீர் மின்தடை: பொதுமக்கள் அவதி

கோடைகாலத்தில் திடீர் திடீரென மின்சார விநியோகம் தடைபடுவதால் சென்னைவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கோடைகாலத்தில் திடீர் திடீரென மின்சார விநியோகம் தடைபடுவதால் சென்னைவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அக்னி நட்சத்திர காலம் என்பதால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல், இரவு நேரங்களில் மின்விசிறி, குளிர்சாதன கருவி இல்லாமல் மக்களால் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை.
இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் திடீர் திடீரென்று மின்விநியோகம் தடைபடுகிறது. பெரியார் நகர், தியாகராய நகர், எம்.கே.பி.நகர், விருகம்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மின்சாரம் தடைபடுகிறது.
17 ஆயிரம் மெகாவாட்: தமிழகத்தைப் பொருத்தவரை மின்பற்றாக்குறை எதுவும் இல்லை. இருப்பினும் அதிக பயன்பாட்டாலும், வெப்பத்தினாலும் ஏற்படும் பழுதின் காரணமாகவே மின்தடை ஏற்படுகிறது என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:
கோடையில் தண்ணீர் பற்றாக்குறையால் புனல்மின் நிலையங்களைத் தவிர்த்து, பிற உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கூடுதலாக காற்றாலையின் மூலம் சுமார் 3 ஆயிரம், சூரிய மின்சக்தியின் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 17 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் தேவை 14,500 மெகாவாட் மின்சாரம் தான் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மின்தடை ஏன்?: தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகள், அலுவலகள், வணிக வளாகங்களில் மின்சாதனப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகாலை 3 மணி வரை குளிர்சாதன கருவியின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் பயன்படுத்தும்போது ஏற்படும் மின் அழுத்தம் காரணமாக மின்தடை ஏற்படுகிறது.
மேலும், தற்போது மின்வாரியத்தால் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள், கம்பிகள் உள்ளிட்டவை சுமார் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கே உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது, அவற்றில் பழுது ஏற்பட்டு, மின்சார கம்பிகள் துண்டிப்பு, மின்மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது என்று மின்வாரியப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடி சேவை: கோடை காலத்தில் ஏற்படும் மின்தடங்கலை உடனுக்குடன் சரி செய்யும் பொருட்டு, செயற்பொறியாளர்கள் இரவு 1 மணி வரை அலுவலகத்தில் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சார பயன்பாடு அதிகரிப்பு!
தமிழகத்திலேயே சென்னை மாவட்டத்தில்தான் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்துவது வழக்கம்.
மாநிலத்தின் தலைநகரம் என்பதால் பல்வேறு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் என மின்சாரத்துக்கான பயன்பாடுகளை அதிகரிக்கும் காரணிகள் பல இங்கு உள்ளன. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சராசரியாக பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது கோடைக் காலம் என்பதால் இந்தப் பயன்பாடு 3,300 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com