ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறையாது: விக்கிரமராஜா

ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறைய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏறத்தாழ 1,204 பொருள்களுக்கு வரிவிகிதங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
80 பொருள்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல பொருள்களுக்கு நிபந்தனைகளுடன் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த வரிவிலக்கையும் பெறமுடியாத சூழல் உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய மதிப்பு கூட்டுவரிச் சட்டத்தின்படி 589 பொருள்களுக்கு வரிவிலக்கு உள்ளது. ஆனால், இந்த வரிவிலக்கில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் வரிவிதிப்பதில் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களான உணவு தானியங்களுக்கு 5 சதவீதம் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5,12,18,28 சதவீதம் என பொருள்கள் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக வரிவிகிதங்கள் குறைவாக இருக்க வேண்டும். அதிலும் அத்தியாவசியப் பொருள்களுக்கு அறவே வரிவிதிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், 28 சதவீதம் வரிவிதிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு ரூபாய்க்கு 28 பைசா வரி கட்ட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பர்னிச்சர் வகைகள், பெயிண்ட் வகைகள், வாஷிங்மெஷின், ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 சதவீதமாக இருக்கும் சேவை வரி 18 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
வணிகர்களைப் பொருத்தவரை ரூ.50 லட்சம் வரை மொத்த விற்பனைத் தொகை உள்ள வணிகர்களுக்கு ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியிருந்தோம். ஆனால், ரூ.20 லட்சம் வரைதான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜிஎஸ்டி சட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு வணிகர்களையும் பாதிக்கும். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைவர்.
ஜிஎஸ்டி சட்டத்தால் விலைவாசி குறையும் என சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை.
ஜிஎஸ்டி சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த அனைத்து வணிக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். எனவே, மத்திய அரசு வணிகர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com