பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சுகாதாரத் துறை செயலர் ஆய்வு

அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ள பாதிப்புக்குள்ளான பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தைத் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சுகாதாரத் துறை செயலர் ஆய்வு

அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ள பாதிப்புக்குள்ளான பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தைத் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
பொழிச்சலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர். இங்கு சராசரியாக நாள்தோறும் 350 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 
மகப்பேறு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு 40 குழந்தைகள் பிறக்கின்றன. ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு 24 மணி நேர மருத்துவச் சேவை வழங்கி வரும் இம்மையத்தில் மழைக் காலங்களில் வெள்ளம் புகுந்து, மருத்துவமனைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக சட்டப் பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, தனது பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவச் சேவை அளித்து வரும் பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை மேம்படுத்தவும், ஆண்டுதோறும் மழைக் காலத்தில் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்து ஏற்படுத்தும் பாதிப்பைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு வியாழக்கிழமை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைகளை பிரசவித்த பெண்களிடம் மருத்துவ சிகிச்சை, உணவு, பணஉதவி, வசதிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மருத்துவமனை வளாகத்தினுள் மழைநீர் புகாதவகையில் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார்.
எம்எல்ஏ கோரிக்கை: அப்போது, பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர்தான் பொழிச்சலூர் ஆரம்ப சுகாதார மையத்துக்குள் புகுந்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள ஞானமணி நகர் வழியாக மழை வெள்ளத்தை வெளியேற்ற பொக்லைன் மூலம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அங்கு 30 அடி அகல கால்வாய் அமைத்து, அதன் மூலம் மழைநீர் அடையாற்றில் செல்லும் வகையில் பணிகள் மேற்கொண்டால், இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றார்.
அவ்வப்போது, மருத்துவமனையில் ஏற்படும் மின்தடை பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஜெனரேட்டர் அமைக்கும் பணிக்கு சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 30 அடி அகல கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர் எஸ். கங்காதாரணியை, சுகாதாரத் துறைச் செயலர் கேட்டுக் கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணி துணை இயக்குநர் வி.கே.பழனி, மருத்துவர் சி.ஹெச்.மகேந்திரன், பொழிச்சலூர் ஊராட்சி அலுவலர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com