வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

வீர தீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதி சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாகப் பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. அதற்காக, சென்னை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் விண்ணப்பம் வழங்க வேண்டும்.
பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், தற்காப்புக் கலையில் மாநில அளவில் சான்று பெற்றிருத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருப்பது, சமூக அவலங்கள் மற்றும் அதனைத் தீர்வு காண்பதற்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்திருத்தல் போன்றவற்றில் தீரச் செயல் புரிந்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும். பரிந்துரை செய்யப்படும் குழந்தையின் பெயர், தாய், தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை இணைத்து வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு சென்னை ராஜாஜி சாலையில், சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்) 8-ஆவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com