டாஸ்மாக்கில் தரமற்ற மதுபானம் விற்பனை: மனு தள்ளுபடி

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தரமற்ற மற்றும் கலப்பட மதுபானங்களை விற்பனை செய்பவர்கள்,

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தரமற்ற மற்றும் கலப்பட மதுபானங்களை விற்பனை செய்பவர்கள், உற்பத்தி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஸ்ரீராம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நானும் எனது நண்பரும் கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி அருந்தினோம். மது அருந்திய பின் வயிற்று வலியும், வாந்தி பேதியும் ஏற்பட்டது. அந்த மது வகைகளை தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம்.
 அந்த ஆய்வில் மதுபானத்தில் டார்டாரிக் அமிலம் அதிகளவில் கலந்திருப்பது தெரியவந்தது. அந்த ஆய்வறிக்கையை உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் மதுபானங்களை சோதனைக்கு உட்படுத்த முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 எனவே, டாஸ்மாக் கடைகளில் தரமில்லாத மற்றும் கலப்பட மதுபானங்களை விற்பனை செய்பவர்கள், உற்பத்தி செய்கிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை ஆய்வுக்கு உட்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
 இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுபானங்களை அவற்றை உற்பத்தி செய்யும் மதுபான ஆலைகளில் ஆய்வு செய்யக் கோரும் வகையில் புதிய மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மனுதாரர் மனுவைத் திரும்ப பெறுவதாக கூறியதை அடுத்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com