சென்னையில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக மேலும் 35 வார்டுகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மேலும் 35 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மேலும் 35 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துகள், குறைகளைத் தெரிவிக்க 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் 'கவச் பாரத்' திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திறந்தவெளி கழிப்பிடமில்லாத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி 46 வார்டுகளும், ஜூன் 21-இல் 15 வார்டுகளும், ஆக. 16-இல் 54 வார்டுகளும், அக். 25-இல் 50 வார்டுகளும் என மொத்தம் 165 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தற்போது மேலும் 35 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1-ஆவது மண்டலம் திருவொற்றியூருக்கு உட்பட்ட 1, 2, 3, 4, 7, 9 வார்டுகள், 4-ஆவது மண்டலம் தண்டையார்பேட்டைக்கு உட்பட்ட 37, 39, 41, 46, 47 வார்டுகள், 5-ஆவது மண்டலம் ராயபுரத்துக்கு உட்பட்ட 56, 60 வார்டுகள், 6-ஆவது மண்டலம் திரு.வி.க. நகருக்கு உட்பட்ட 72, 73, 77 வார்டுகள், 8-ஆவது மண்டலம் அண்ணாநகருக்கு உட்பட்ட 98-ஆவது வார்டு, 11-ஆவது மண்டலம் வளசரவாக்கத்துக்கு உட்பட்ட 143, 144 வார்டுகள், 12-ஆவது மண்டலம் ஆலந்தூருக்கு உட்பட்ட 156, 157, 166 வார்டுகள், 13-ஆவது மண்டலம் அடையாறுக்கு உட்பட்ட 171, 172, 173, 182 வார்டுகள், 14-ஆவது மண்டலம் பெருங்குடிக்கு உட்பட்ட 169, 184, 188, 189, 191 வார்டுகள், 15-ஆவது மண்டலம் சோழிங்கநல்லூருக்கு உட்பட்ட 193, 196, 198, 200 வார்டுகள் இதில் அடங்கும்.
பட்டியலிடப்பட்டுள்ள வார்டுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், சுயஉதவிக் குழுவினர் மற்றும் தனியார் தங்கள் சொந்த வளாகத்திலுள்ள கழிவறைகளையே பயன்படுத்துவதாக அளித்த சான்றுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
கழிப்பறை இல்லாத குடும்பங்கள் தங்கள் வளாகத்தில் போதிய இடம் இருந்தால் மத்திய அரசின் உதவியுடன் கழிப்பறை கட்டவும், இடம் இல்லாத பட்சத்தில் தங்கள் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் ஒரு சமுதாயக் கழிப்பறை கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகள், குறைகளை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களை 15 நாள்களுக்குள் அணுகி தெரிவிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com