சென்னையில் 'சைக்கிள் ஷேரிங்' திட்டம்: ஓரிரு வாரங்களில் டெண்டர்

பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்துக்குத் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்திட ஓரிரு வாரங்களில் ஒப்பந்தம் இறுதி

பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்துக்குத் தகுதியான நிறுவனங்களைத் தேர்வு செய்திட ஓரிரு வாரங்களில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார். 
சென்னை மாநகரில் கடந்த ஆண்டு கணக்குப்படி 47,57,822 வாகனங்கள் பதிவாகியுள்ளன. தவிர பிற மாவட்ட, மாநில வாகனங்கள் என சென்னை மாநகருக்குள் தினசரி 60 லட்சத்துக்கும் அதிகமாக இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பகுதி இரு சக்கர வாகனங்களாகும். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
இதற்காக ஜிபிஎஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது பெயர், விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு ஸ்மார்ட் கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட் கார்டைக் கொண்டு அருகிலுள்ள சைக்கிள் நிலையத்திலிருந்து தாங்களாகவே சைக்கிளை எடுத்துக்கொள்ளவும், மாநகரிலுள்ள எந்த நிலையத்திலும் நிறுத்திவிட்டுச் செல்லவும் முடியும்.
முதல் கட்டமாக 5,000 சைக்கிள்களை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு தகுதியான நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் டெண்டர் நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார். இத் திட்டத்தைச் செயல்படுத்த சாலைகளில் தனிப்பாதை ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவைப் பொருத்து, இந்தத் திட்டம் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பிற மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com