சென்னை மாவட்டத்தில் 40.73 லட்சம் வாக்காளர்கள்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 40.73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.
சென்னை மாவட்டத்தில் 40.73 லட்சம் வாக்காளர்கள்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 40.73 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்து கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் படிவம் 6 -ஐ பூர்த்தி செய்தும், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் -7ஐ பூர்த்தி செய்தும், பட்டியலில் திருத்தம் செய்ய படிவம் 8 -ஐ பூர்த்தி செய்தும் கொடுக்க வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் இருந்தால், அதுதொடர்பாக படிவம் 8ஏ-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் 31 -ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கலாம். இதுதவிர வருகிற 8 மற்றும் 22 -ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in www.nasp.in ஆகிய வலைதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 2,699 வாக்குச் சாவடிகளும், 72 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அவை மறுசீரமைக்கப்பட்டு, 3, 768 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 83 ஆயிரத்து 359 ஆகும்.
தற்போது நடைபெற்று முடிந்துள்ள தொடர் திருத்தத்தின் மூலம் 16,081 ஆண் வாக்காளர்கள், 16,474 பெண் வாக்காளர்கள், 19 இதர வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 8,071 ஆண் வாக்காளர்கள், 8,002 பெண் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 73 ஆயிரத்து 703 ஆகும்.
அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியான வேளச்சேரியில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதியான துறைமுகத்தில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 102 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் கார்த்திகேயன்.
சென்னை ரிப்பன் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் பாலகங்கா, திமுக சார்பில் மதன்மோகன், மருதுகணேஷ், தேமுதிக சார்பில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அதனை பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com