அடிப்படை வசதிகள் கோரி பல் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை (அக்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகள் கோரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை (அக்.4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிமுனையில் செயல்பட்டு வந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதே பகுதியில் உள்ள புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனையடுத்து மருத்துவமனை இருந்த வளாகத்தில் ஒரு பகுதியில் மருத்துவ மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் விடுதியில் இருந்து சென்ட்ரல் பழைய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்கு அளிக்கப்பட்ட இலவச பேருந்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுதொடர்பாக மாணவர்கள் கூறியது: தினமும் சுமார் 5 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் பேருந்து சேவை அளிக்க வேண்டும். மேலும், தற்போது தங்கியுள்ள விடுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் சென்னை மருத்துவக் கல்லூரி விடுதிக்கு எங்களை மாற்ற வேண்டும் என்றனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பல் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு கூறியது:
பழைய பேருந்து பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலைக்குச் சென்றுவிட்டது. புதிய பேருந்து வாங்குவதற்கு அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க இலவச பாஸ் பெற்றுத் தரப்படும். மேலும், பழைய கல்லூரியில் உள்ள கட்டடத்தை ரூ.53 லட்சம் செலவில் விடுதியாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதுவரை மாணவர்களை தங்க வைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com