புறநகர் பகுதிகளில் மழை: ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 680 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 680 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பருவமழை பொய்த்து போனதால் ஏரிகள் வறண்டன.
இதையடுத்து கல்குவாரி தண்ணீர், நெய்வேலி சுரங்க தண்ணீர், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை புறநகர் பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கத்தில் 33 மி.மீ., சோழவரத்தில் 25 மி.மீ. மழை புதன்கிழமை பதிவானது. 
தற்போது புழல் ஏரிக்கு விநாடிக்கு 500 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 283 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீரின் இருப்பு அதிகரித்துள்ளது. 
பூண்டி ஏரியில் 68 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 51 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 282 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 279 மில்லியன் கன அடி என நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 680 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளில் கடந்த வாரம் 370 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, 22 கல்குவாரிகளில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 7 முதல் 8 கோடி லிட்டர் லிட்டர் தண்ணீர் மற்றும் நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து தலா 10 கோடி லிட்டர் வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன், போரூர் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com