குடிநீர் வாரிய அலுவலகங்களில் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களிலும் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள 15 பகுதி அலுவலகங்களிலும் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை குறித்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (அக்.11) நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியது: அனைத்து கழிவுநீரேற்று நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் விநியோகிக்கும் நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள இயந்திரங்களும் மாற்று இயந்திரங்களும் இயங்கும் நிலையில் தயாராக இருக்கவேண்டும்.
ஜெனரேட்டர் இயக்கத் தேவையான அளவு டீசல் இருப்பில் வைக்கவேண்டும். பகுதி அலுவலர்களால் பாதாளசாக்கடை தொட்டிகள் கண்காணிக்கப்பட வேண்டும். உடைந்த மற்றும் காணாமல் போன ஆள் நுழைவாயில் மூடிகள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் குடிநீர் மாசுபடுவது கண்டறியப்பட்டால், குழாய்களின் மூலம் குடிநீர் வழங்குவதற்குப் பதிலாக, குடிநீர் லாரிகள் மூலம் வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
அடிக்கடி கழிவுநீர் அடைப்பு ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தலைமை அலுவலகம் உள்பட அனைத்து பகுதி அலுவலகங்களிலும் 24 மணி நேர குறைதீர் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.
வெள்ள நீர் தங்குத் தடையின்றிக் கடலில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரங்களில் தூர் வாரும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொலைபேசி எண்கள்: அனைத்து அலுவலர்களிடமும் அனைத்துத் துறைகளின் தொலைபேசி எண்கள், செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டும். கடந்த முறை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முன்கூட்டியே சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படும் முன்னரே தக்க நடவடிக்கைகள் தற்பொழுதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com