நிறைவை நோக்கி துறைமுக இணைப்புச் சாலை திட்டம்?: சிக்கல்களை தீர்க்க அதிரடி நடவடிக்கை

துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் வீடுகள் அகற்றப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
நிறைவை நோக்கி துறைமுக இணைப்புச் சாலை திட்டம்?: சிக்கல்களை தீர்க்க அதிரடி நடவடிக்கை

துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்தில் வீடுகள் அகற்றப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதனையடுத்து நிலுவையில் உள்ள விடுபட்ட பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் விரைவில் முழுமை பெறும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்படுகிறது. 
ரூ. 650 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச்சாலைத் திட்டம் கடந்த ஜனவரி 2011-ல் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 95 சதவீத பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டநிலையில் சில இடங்களில் மட்டும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் இத்திட்டமே முழுமையடையாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்தப் பணியைச் செய்து வந்த ஒப்பந்ததாரரும் காலதாமதம் காரணமாக விலகிச் சென்றுவிட்டார். 
அகற்றப்பட்ட மீனவ கிராம வீடுகள்: நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னையாக இருந்து வந்த திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மீனவ கிராம வீடுகள் அனைத்தும் சமீபத்தில் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. இருப்பினும் ஏற்கனவே சாலை அமைக்கும் பணிகளைச் செய்து வந்த ஒப்பந்ததாரர் விலகிக் சென்று விட்டதால் நிலம் கையகப்படுத்தியும் சாலை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை சாலை அமைக்கும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக தற்போதைய இடம் ஆழப்படுத்தப்படும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
திட்டப்பணிகள் விரைவில் முழுமை பெறும்: நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் மீனவ கிராமம் தவிர எண்ணூர் விரைவு சாலையில் அமைந்துள்ள ஜீவ வார்த்தை விடுதலை சபை, முத்துகிருஷ்ணசாமி மடம் ஆகிய இரண்டும் அகற்றப்பட வேண்டியதுள்ளது. இவை தவிர காசிமேடு மீன்பிடித் துறைமுக பகுதியில் பாலம் அமைப்பதற்காக இடத்தைக் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது. இவைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக இறங்கி உள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவரை மீண்டும் அயல் பணி அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியமர்த்தியுள்ளது. இவரது அனுபவம் இத்திட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு மாநில அரசும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கி வருகிறது எனவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com