சுற்றுப்புறத்தில் கொசு உற்பத்தியானால் ரூ.2 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை கொசு உற்பத்தியாகும் வகையில் வைத்திருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை கொசு உற்பத்தியாகும் வகையில் வைத்திருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து ராயபுரம் மண்டலம் புதுப்பேட்டை மார்க்கெட் பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இப் பணிகளை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
14 புகைப் பரப்பும் இயந்திரங்கள், கையினால் அடிக்கும் 11 புகைப் பரப்பும் இயந்திரங்கள், 2 வாகனங்கள் மூலம் புகைப்பரப்பும் இயந்திரங்கள், தண்ணீர் தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணிகளையும் பார்வையிட்டனர். 
வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தேவையற்ற பொருள்களான டயர், தேங்காய் ஓடுகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், உரல், மூடப்படாத பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த வாகன உதிரி பாகங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீர் மூலம் 
உற்பத்தியாகும் கொசுப்புழுக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் அளித்த பேட்டி: 
சென்னையில் உள்ள 200 வார்டுகளையும் 2,035 சிறு வட்டங்களாகப் பிரித்து டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் மாநகராட்சி மலேரியா தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் என மொத்தம் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 
டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் உபயோகமற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என இரண்டு முறை அறிவிப்பு வழங்கப்படும். அதனைப் பொருட்படுத்தாமலும், தொடர்ந்து கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் உள்ள வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெறும். இதனையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
முதல் முறையாகக் கண்டறியப்பட்ட வீடுகளுக்கு ரூ.2 ஆயிரம், இரண்டாவது முறையாகக் கண்டறியப்படும் வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாவதாகக் கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதுவரை ரூ.12.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
அபராதத்தின் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது நோக்கம் இல்லை. இந்தத் தவறை மீண்டும் தொடரக்கூடாது என்பதோடு அருகிலுள்ளோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் நோக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com