ஜிஎஸ்டி-யால் தீபாவளி கொண்டாட்டம் பாதிப்பு

சரக்கு -சேவை வரியால் (ஜிஎஸ்டி) தீபாவளி கொண்டாட்டம் மிகவும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

சரக்கு -சேவை வரியால் (ஜிஎஸ்டி) தீபாவளி கொண்டாட்டம் மிகவும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 
இதுதொடர்பாக, மேற்கு தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியின் வணிக மேலாண்துறை மாணவர்கள், கடந்த வாரம் மேற்கொண்ட ஆய்வின் முடிவு குறித்து, சமூக அறிவியல் ஆய்வாளரும், துறை இயக்குநருமான கே.மாறன் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கை:
தமிழக மக்கள் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார பிரச்னைகளுக்கு இடையே, தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாட உள்ளனர் என்பது குறித்து கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. சாய்ராம் மேலாண்மைத் துறையைச் சார்ந்த 200 மாணவர்கள், 30 பேராசிரியர்கள், 3,000 -க்கும் மேற்பட்ட மாநகர, நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த உயர் நடுத்தர, நடுத்தர, பாமர மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தினர். குடும்பத் தலைவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் இக்கருத்துகணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர்.
எந்த வகை செலவினங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர் என்ற கேள்விக்கு , புத்தாடைகளுக்கு என 64 சதவீதம் பேரும், பட்டாசு வகைகளுக்கு என 41 சதவீதம் பேரும், வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நகைகள் ஆகியவற்றுக்கென 20 சதவீதம் பேரும் பதிலளித்தனர்.
பண்டிகை செலவை தங்களது வருமானத்திற்குள் கொண்டாட விரும்புவதாக 60 சதவீதம் பேரும், கடன் வாங்கி கொண்டாட விரும்புவதாக 25 சதவீதம் பேரும் தெரிவித்தனர். 
88 சதவீதம் பேர்: மத்திய அரசின் சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) உங்கள் செலவினம், மகிழ்ச்சியைப் பாதித்துள்ளதா என்ற கேள்விக்கு மிகவும் பாதித்துள்ளது என்று 88 சதவீதம் பேரும், வரியா, விலைவாசி உயர்வா என்று பிரித்துப்பார்க்க தெரியவில்லை என 12 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
1, 120 விவசாயி குடும்பத்தினரிடம் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட போகிறீர்களா என்ற கேள்விக்கு, 37.5 சதவீதம் பேர் வழக்கம்போல் மகிழ்ச்சியுடன் கொண்டாடப் போவதாகக் கூறினர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com