தீபாவளி: காற்று மாசு அதிகரிப்பால் புகைமண்டலமான சென்னை!

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஒட்டுமொத்தமாக, சென்னை மாநகரில் காற்றில் மாசு 300 மைக்ரான் அளவுக்கு அதிகமாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 
தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக, சென்னை திருமங்கலம் மேம்பாலத்தில் புதன்கிழமை இரவு சூழ்ந்த புகைமூட்டம்.
தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக, சென்னை திருமங்கலம் மேம்பாலத்தில் புதன்கிழமை இரவு சூழ்ந்த புகைமூட்டம்.

தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஒட்டுமொத்தமாக, சென்னை மாநகரில் காற்றில் மாசு 300 மைக்ரான் அளவுக்கு அதிகமாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 
காற்றில் மாசு அதிகரித்ததால் புதன்கிழமை (தீபாவளி அன்று) இரவு சென்னையின் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும், சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டது. புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை மாநகர் முழுவதும் புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், சென்னை முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. தெருக்கள், சாலைகள் எங்கும் குப்பை, கூளங்களாக காட்சியளித்தன. இதுவரை இல்லாத அளவிற்கு, சென்னையில் 300 மைக்ரான் அளவுக்கு காற்றில் மாசு அதிகரித்துள்ளது. குறைந்த அளவே பட்டாசுகள் வெடிக்கப்பட்டாலும், தரைக் காற்று வீசாததால் காற்றில் மாசு அதிகரித்துவிட்டதாக தெரிகிறது. 
கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின்போது 134 மைக்ரானாக இருந்த காற்று மாசு இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 300 மைக்ரான் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத அளவில், அதாவது 60 மைக்ரான்தான் காற்றில் மாசு இருக்க வேண்டும். ஆனால் 300 மைக்ரான் வரை காற்றில் மாசு அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டி, அண்ணா நகர், ராயபுரம், கோடம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு அதிக காற்று மாசு இருந்தது. அம்பத்தூர், மணலி போன்ற தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் இதைக் காட்டிலும் காற்றில் கூடுதலாக மாசு பதிவாகி உள்ளது.
குறிப்பாக மணலியில் 436 மைக்ரான் அளவுக்கு காற்று மாசு பதிவாகி உள்ளது. இதற்கு தீபாவளி பட்டாசு மட்டுமின்றி, தொழிற்சாலைகள், குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை தயாரிக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் மாசு காற்றில் கலந்ததும் காரணமென தெரிகிறது. ஐஐடி அமைந்துள்ள பகுதியில் 218 மைக்ரானும், ஆலந்தூர், ஆயிரம் விளக்கு பகுதிகளில் 190 மைக்ரானும் பதிவாகி உள்ளது.
சென்னையின் 5 இடங்களில், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஒலி மாசு பற்றிய ஆய்வில், நகரில் அதிக அளவில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் அதிக அளவில் ஒலி மாசு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வேகம் குறைவாக இயக்கப்பட்ட மின்சார ரயில்கள்: சென்னை மாநகர் முழுவதுமே புதன்கிழமை புகை மூட்டத்தால் சூழப்பட்டது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், செளகார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர், மணலி, வேளச்சேரி, அடையாறு, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் புகைமூட்டம் காணப்பட்டதால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. எதிரே வரும் வாகனங்கள்கூட கண்ணுக்கு தென்படாத அளவிற்கு புகைமூட்டம் காணப்பட்டது. மேலும், இதன் காரணமாக வியாழக்கிழமை காலை புறநகர் மின்சார ரயில்கள் குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்டன.
விமான சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஆலந்தூர், பொழிச்சலூர், பல்லாவரம், பம்மல், மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் விமான நிலையம் மற்றும் விமான நிலைய ஓடுபாதை புகைமூட்டமாக காணப்பட்டது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை (அக்.18) இரவு 10 மணி முதல் வியாழக்கிழமை (அக்.19) அதிகாலை 2 மணி வரை விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது, நீண்ட நேரத்துக்குப் பின் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இதே போல் சிங்கப்பூர், கோலாலம்பூர், தோஹா, பாங்காக், ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களும், தில்லி, மும்பை, ஹைதராபாத், புணே, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானங்கள் உள்பட 23 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com