வெள்ள அபாயத்தில் திருவொற்றியூர் மேற்குப் பகுதி

திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால் மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதியின் பல்வேறு இடங்களில் நீர் தொடர்ந்து தேங்கி வருகிறது.
திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் உள்ள காமராஜர் நகரில் தேங்கிய மழைநீருக்கிடையே குடிநீரைப் பிடிக்கும் மக்கள். 
திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் உள்ள காமராஜர் நகரில் தேங்கிய மழைநீருக்கிடையே குடிநீரைப் பிடிக்கும் மக்கள். 

திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால் மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதியின் பல்வேறு இடங்களில் நீர் தொடர்ந்து தேங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் முதன் முதலில் 2000-ஆம் ஆண்டு ரூ. 56 லட்சம் செலவில் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இக்கால்வாய்க்கான துணைக் கால்வாய்கள், இணைப்புக் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படவில்லை. 
இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதியாக மாற்றம் பெற்ற பிறகு ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்படும் பணி, நிறைவடையும் நிலையில் உள்ளது. ஒரு புறம் மழைநீர்க் கால்வாய், மறுபுறம் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணி பெற்று வந்ததால் எங்கு பார்த்தாலும் பள்ளமும், மேடுமாக காணப்படுகின்றது.
இப்பகுதியில் பெய்யும் மழைநீர் முறையாக வெளியேறும் நிலையில் கால்வாய்கள் முறையாக இல்லை. இதனால் கனமழை பெய்யும் போதெல்லாம் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. பல இடங்களில் குடிநீரோடு மழைநீரும் சேர்ந்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்: கடந்த 2015-இல் கொட்டிய கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு மாதம் கடந்த போனது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிலடங்காதது. இச்சம்பவத்திற்கு பிறகும் கடந்த இரு ஆண்டுகளாக மீண்டும் கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த சுமார் ஓராண்டாக மக்கள் பிரதிநிதிகளும் இல்லாத நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகள் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. சாக்கடை, மழைநீரை அகற்றுவது யார்? என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடையே தொடர்ந்து இணக்கம் இல்லாத நிலை உள்ளது. மேலும் கடந்த இரு ஆண்டுகளில் திருவொற்றியூர் மண்டலத்தில் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி மண்டல அதிகாரி மட்டும் இரு ஆண்டுகளில் நான்கு பேர் மாற்றப்பட்டுள்ளன.
தற்போதைய மண்டல அதிகாரி அனிதா பொறுப்பேற்று சுமார் ஒரு மாதம் கூட இன்னும் ஆகாத நிலையில் உயர் அதிகாரிகளும் இதுவரை இப்பிரச்னையை உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
போர்க்கால நடவடிக்கை தேவை: இது குறித்து முன்னாள் மாமன்ற உறுப்பினர் வின்சென்ட் அமல்ராஜ் கூறியது,
திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் மழைநீர் கால்வாய்கள் முறையாகஅமைக்கப்படவில்லை. சேகரிக்கப்படும் மழைநீர் இறுதியாக பக்கிங்காம் கால்வாயில்தான் விடப்படுகிறது. ஆனால் இதன் நீரோட்டம் இக்கால்வாயில் செல்லும் நீரோட்டத்திற்கு ஏற்பவே உள்ளது. இதனால் சில நேரங்களில் ராட்சத மோட்டார்களைக் கொண்டு வெள்ளநீரை பக்கிங்காம் கால்வாயில் இரைத்தனர். மோட்டார்கள் இயங்காதநிலையும் நீடிக்கிறது. தற்போது கனமழை பெய்த அடுத்த ஒரு வாரத்திற்கு பல இடங்களில் மழைநீர் வெளியேறவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எந்த அதிகாரியும் இப்பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதே நிலை நீடித்தால் 2015-ஆம் ஆண்டைப் போல அடுத்து வரும் தொடர்மழையில் இப்பகுதி மீண்டும் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வடசென்னை பகுதியில் நீரில் மூழ்கும் பகுதியாக அறியப்பட்டுள்ள இப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் கால்வாய்கள் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com