என்.எல்.சி. நிறுவனத்துக்கு இடம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலை வழங்க உத்தரவு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு(என்எல்சி) இடம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கவும், அந்த வேலை வாய்ப்புகள் முறையாக வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்கவும் சென்னை உயர்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு(என்எல்சி) இடம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கவும், அந்த வேலை வாய்ப்புகள் முறையாக வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, கடலூரைச் சேர்ந்த, என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான சேகர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1956 இல், என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலத்தை வழங்கியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 50 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி, நிலம் வழங்கிய 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 1995 -இல் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தற்போது 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும், 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 4 ஆயிரம் பொறியாளர்களும், 5 ஆயிரம் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். இந்த 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 4 -ஆம் தேதி, ஒப்பந்த தொழிலாளர்களை தேர்வு செய்ய என்எல்சி நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஏற்கெனவே நிலம் வழங்கி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்கிற நிபந்தனை இல்லை. எனவே நிர்வாகத்தின் ஒப்பந்த தொழிலாளர் தேர்வு குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்ட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது என்எல்சி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தும்போது ஏற்கெனவே நிலம் வழங்கியவர்களுக்கு 50 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, என்எல்சி நிர்வாகம் முறையாக 50 சதவீத வேலைவாய்ப்பை நிலம் வழங்கியவர்களுக்கு வழங்க வேண்டும். இதனை என்எல்சி நிர்வாகம் சரியாக நடைமுறைபடுத்தியுள்ளதா என்பதை மத்திய அரசின் நிலக்கரித் துறை, தமிழக அரசின் சமூக நலம் மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com