சுகாதாரத் துறையில் தனியாரின் தலையீட்டை தடுக்க வேண்டும்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று மக்கள் நலவாழ்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று மக்கள் நலவாழ்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மக்கள் நலவாழ்வு இயக்கத்தின் சார்பில், தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குழந்தைகள் உரிமைக்கான சட்ட வள ஆதார மையத்தைச் சேர்ந்த க.சண்முகவேலாயுதம் பேசியது:
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் 1997 }ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்காததால் இதுவரை தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், மத்திய அரசு 2010 }ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. 2012 }ஆம் ஆண்டில் அதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் 10 மாநிலங்களில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் செயல்படுத்தவில்லை. சட்டம் நிறைவேற்றியும் தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தாததால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சாதாரண மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி, தனியார் மருத்துவமனைகளில் 40 சதவீதம் தகுதியற்ற மருத்துவர்களால் சேவை அளிக்கப்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பங்கள் புகார் அளிப்பதற்கும், போராடுவதற்கும் முன்வருவதில்லை என்றார் அவர்.
கோரிக்கைகள்: தமிழகத்தில் அரசு காப்பீட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் தனியார் பங்கேற்பதை நிறுத்த வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்காக ஒதுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 24 மணி நேர மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com