தண்டையார்பேட்டையில் தொழிலதிபர் கடத்தல்: 4 பேர் கைது

தண்டையார்பேட்டையில் ரூ.80 லட்சம் கேட்டு மர்மக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபரை, ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு விடுவித்தனர்.

தண்டையார்பேட்டையில் ரூ.80 லட்சம் கேட்டு மர்மக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட தொழிலதிபரை, ரூ. 3 லட்சம் வாங்கிக் கொண்டு விடுவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் பக்ரி முகமது (63). இவர் பேப்பர் பிளேட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பக்ரி முகமது, புதன்கிழமை முன்தினம் காலை தொழுகைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அருகில் வந்து நின்ற காரில், 4 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர், பக்ரி முகமதுவின் முகத்தில் மயக்க ஸ்பிரேயை அடித்தார். அவர் மயங்கியதும் காரில் கடத்திச் சென்றனர். பின்னர் இந்தக் கடத்தல் கும்பல், பக்ரி முகமதுவை காட்பாடிக்கு கொண்டு சென்றது. அங்கு ஒரு இடத்தில் அடைத்து வைத்து ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டினர். ஆனால், பக்ரி முகமது அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ரூ.3 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று கடத்தல் கும்பல் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது நண்பர் ஒருவரிடம் பேசிய பக்ரி முகமது, தொழில் விஷயமாக காட்பாடிக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். சென்னையில் தான் அனுப்பி வைக்கும் நபரிடம் ரூ.3 லட்சம் பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகில் வைத்து, கடத்தல் கும்பலை சேர்ந்த நபரிடம் ரூ.3 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் பக்ரி முகமது உடனடியாக விடுவிக்கப்பட்டார். அவர் சென்னை திரும்பியதும் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார்
இந்தக் கடத்தில் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து, தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், இந்தக் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் காட்பாடியில் கைது செய்தனர். அவர்களது பெயர்கள் இதுவரை வெளியிடவில்லை. இந்தக் கடத்தலில் தொடர்புடைய வேறு சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com