தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் மணி வெற்றி

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-இல் கூடியது. அதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது . இதில் துணை விதிமுறைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. பள்ளிக் கல்வி அமைச்சரை துணை புரவலராக்க முடிவு செய்யப்பட்டது. தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ஆம் தேதி தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் சனிக்கிழமை (செப்.16) காலை 10.30 மணி அளவில் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். இதையடுத்து சனிக்கிழமை பிற்பகலில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com