விபத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு எக்மோ கருவி மூலம் மறுவாழ்வு

இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியைக்கு "எக்மோ' கருவி மூலம் சிகிச்சை அளித்து, சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் மறு வாழ்வு அளித்துள்ளனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியைக்கு "எக்மோ' கருவி மூலம் சிகிச்சை அளித்து, சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவர்கள் மறு வாழ்வு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக மியாட் மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர் விஜித் கே.செரியன், அவசர சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் டி.பி.நிஷித், மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியை வித்யா (29) ஐந்து மாதங்களுக்கு முன்பு, கார் -ஆட்டோ விபத்தில் சிக்கியதில் அடிவயிற்றுப் பகுதி, இடுப்பெலும்பு, தலை, முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, உடனடியாக அவரது கணவர் குருராஜன் செவிலிய அதிகாரியாகப் பணியாற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆரம்ப நிலை இதய இயக்க மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வித்யா, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட வித்யாவுக்கு குறைவான ரத்த அழுத்தம், சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால் செயற்கை சுவாசக் கருவி ("வென்டிலேட்டர்') பொருத்தப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 நாள்கள் இருந்த வித்யாவின் அடிவயிற்றுப் பகுதி, இடுப்பெலும்பு, தலை, முகம் ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளை அந்தந்த துறை நிபுணர்கள் தொடர்ந்து சரி செய்யத் தொடங்கினர்.
"எக்மோ' கருவி ஏன்? பொதுவாக மூச்சு விடுதல் பிரச்னை சீரானவுடன், மூன்று அல்லது நான்காவது நாளில் செயற்கை சுவாசக் கருவி ("வென்டிலேட்டர்') அகற்றப்படும். 
ஆனால், வித்யாவின் நுரையீரல் செயல் திறன் சீராகாமல் இருந்ததால், நீடித்த செயற்கை சுவாசக் கருவி பயன்பாட்டினை கருத்தில் கொண்டு "டிரக்யாஸ்டமி' சிகிச்சை (மூச்சுக் குழலில் துளையிடுதல்) மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், செயற்கை -சுவாசக் கருவி பொருத்தப்பட்ட 13 -ஆவது நாளில் பிராண வாயுவின் தேவை அதிகரித்தது; ரத்த அழுத்தம் குறைந்து, பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. இதையடுத்து நுரையீரல் செயலிழப்புக்கு உரிய உயிர் காக்கும் சிகிச்சையான "எக்மோ' கருவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
அதாவது, "எக்மோ' கருவி மூலம் உடலுக்குள் ரத்தம் (பிராண வாயு கிடைக்கச் செய்தல்) செலுத்தப்பட்டது; 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் உள்பட வித்யாவின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. அண்மையில் அவர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினார் என்று அவர்கள் 
தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com