குழந்தைக் கடத்தல் கும்பலிடமிருந்து மேலும் ஒரு குழந்தை மீட்பு

சென்னையில் குழந்தைக் கடத்தல் கும்பலிடமிருந்து மேலும் ஒரு குழந்தையை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.

சென்னையில் குழந்தைக் கடத்தல் கும்பலிடமிருந்து மேலும் ஒரு குழந்தையை போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த மணிமேகலைக்கு (22) சுமார் 20 நாள்களுக்கு முன்பு, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 18 -ஆம் தேதி மணிமேகலை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது 15 நாள்களே ஆன பெண் குழந்தையை ஒரு கும்பல் கடத்திச் சென்றது. 
இதுகுறித்து பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில், இந்தக் குழந்தை கடத்தலில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை செய்யும் தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி சுமித்ரா (33), சேலம் குகைத் தெருவைச் சேர்ந்த க.மணிமேகலை (29), அவரது தோழி ஐஸ்வர்யா (25) ஆகியோர்தான் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து குழந்தையை மீட்டனர். 
இந்த வழக்கு விசாரணை குறித்து, சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் ஆர்.சுதாகர், பூக்கடை துணை ஆணையர் எஸ்.செல்வக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
இந்தச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் சேலம் மணிமேகலைத்தான். அவர்தான், குழந்தையைக் கடத்தும் நோக்கத்துடன் கடந்த 6 மாதங்களாக சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு, அடிக்கடி வந்து சென்றுள்ளார். 
அப்போது அங்குள்ளவர்களிடம் அவர், தான் காவல் துறை உதவி ஆணையர் என்றும், உயர் நீதிமன்ற வழக்குரைஞர் என்றும் இடத்துக்கு ஏற்றாற்போல பொய் கூறியுள்ளார்.
மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லும்போது, தன்னிடம் பழகிய தனியார் நிறுவன பாதுகாவலர் சுமித்ராவுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, தனது திட்டத்துக்கு மணிமேகலை பயன்படுத்தி உள்ளார். கடத்தப்பட்ட பெண் குழந்தையை, ரூ.30 ஆயிரத்துக்கு விற்பதற்கு ஒரு தரப்பிடம் மணிமேகலை பேசி வந்துள்ளார். இதில் அந்தக் கும்பல் மணிமேகலையுடனான தொடர்பை திடீரென துண்டித்துள்ளது. இதனால், தான் கடத்திய பெண் குழந்தையை மணிமேகலை தனது வீட்டில் வைத்திருக்கிறார்.
மேலும் ஒரு குழந்தை மீட்பு: இந்தக் கும்பலிடம் சுமார் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை குறித்து அவர்களிடம் விசாரித்ததில், அந்த கும்பல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்த இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணிடமிருந்து கடத்தியிருப்பது தெரிய வந்தது.
தற்போது அந்தக் கும்பலிடமிருந்து அந்தக் குழந்தையை கைப்பற்றி இருக்கிறோம். அந்த குழந்தையின் பெற்றோர் யார் என கண்டறிந்து, அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வழக்குத் தொடர்பாக இன்னும் சிலரை கைது செய்ய உள்ளோம் என்றனர் அவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com