ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது தாக்குதல்: மூவர் கைது
By DIN | Published on : 17th April 2018 04:18 AM | அ+அ அ- |
சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை தாக்கியதாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள் தாங்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானத்தில் சிலம்பம் விளையாடக் கூடாது எனத் தகராறு செய்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள், சிறிது நேரத்துக்கு பின்னர் மேலும் சிலரை சேர்த்துக் கொண்டு அந்த மைதானத்துக்கு வந்தனர். அந்த இளைஞர்கள், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுடன் மீண்டும் தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த இளைஞர்கள், சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தவர்களை உருட்டுக்கட்டை, கம்பி, கற்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யக் கோரி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் திரண்டு வந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நுங்கம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த ர.மகேஷ் (30), மு. தில்லிபாபு (30), ச.சிவா (31) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இவர்களில் தில்லிபாபு, சிவா ஆகிய இருவரும் ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.