தமிழ் வளர்ச்சியில் நீதித் துறையின் பங்களிப்பு அளப்பரியது: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

தமிழ் வளர்ச்சிக்கு நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழாவில் (இடமிருந்து) கவிஞர்கள் அகரமுதல்வன்,  ஆர்.ராஜகோபாலன், ஜி.ஆர்.தேவராஜன், விமர்சகர் ஜமாலன், 
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழாவில் (இடமிருந்து) கவிஞர்கள் அகரமுதல்வன்,  ஆர்.ராஜகோபாலன், ஜி.ஆர்.தேவராஜன், விமர்சகர் ஜமாலன், 

தமிழ் வளர்ச்சிக்கு நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
கவிஞர்களுக்கு விருதுகள்: முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து ஆவணப் படங்கள் மற்றும் இலக்கிய பங்களிப்புக்காக கவிஞர் ரவிசுப்பிரமணியன், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகியவற்றுக்காக எஸ்.சண்முகம் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார். இவ்விருது ரூ.1 லட்சம் பரிசு, மா.அரங்கநாதன் சிலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இதைத் தொடர்ந்து தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது: தமிழகத்தின் மிகப் பெரிய ஆளுமைகள், தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள், தமிழ்ப் பணியாற்றியவர்கள் ஆகியோரில் பெரும்பாலோர் தமிழ் இலக்கியம் படித்த அறிஞர்கள் மட்டுமே அல்ல. சட்டம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக, நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் தமிழுக்கு அளித்திரும் பங்களிப்பு அளப்பரியது. 
வ.உ.சி, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி., எஸ். வையாபுரிப்பிள்ளை உள்ளிட்ட பல ஆளுமைகள் தமிழை வளர்த்தனர். அந்த வகையில் நீதிபதி அரங்க.மகாதேவன் தனது தந்தையின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி இலக்கிய ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்குவது என முடிவு செய்திருப்பது, நீதித்துறை தமிழுக்கு அளித்திருக்கும் இன்னொரு மிகப்பெரிய கொடையாகும்.
தமிழில் சில கதாபாத்திரங்கள் எப்போதும் நினைவில் நிற்கும். பாரதியின் கண்ணம்மா, கல்கியின் வந்தியத்தேவன், நா.பார்த்தசாரதியின் அரவிந்தன்- பூரணி, ஜெயகாந்தனின் கங்கா போன்ற கதாபாத்திரங்களை உதாரணமாகக் கூறலாம்.அந்த வரிசையில் இடம் பெற்ற எழுத்தாளர் மா. அரங்கநாதனின் முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரம் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. 
பரிசுகள், விருதுகளுக்காக ஏங்காதவர்: பரிசுகளுக்காகவும், விருதுகளுக்காகவும் மா.அரங்கநாதன் எப்போதும் ஏங்கியதில்லை; ஆனால் நல்ல சில படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என நினைத்தார். அந்த ஆசை முன்றில் இலக்கிய அமைப்பு, நீதிபதி மகாதேவன்ஆகியோரால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிபதி மகாதேவனுக்கு நன்றி: மா.அரங்கநாதன் விருது போன்று திறமையான இலக்கியவாதிகளைத் தேடிப் பிடித்து வழங்கப்படும் விருதுகள் பெருமையடைகின்றன. சாகித்ய அகாதெமி விருதுக்கு இணையான விருதாக மா.அரங்கநாதன் விருது கருதப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. சிறந்த படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களைக் கௌரவிக்கும் பணியைத் தொடங்கியிருக்கும் நீதிபதி மகாதேவனுக்கு நன்றி என்றார். 
விழாவையொட்டி அருண்மொழி, பக்ருதீன் குழுவினரின் சார்பில் மா.அரங்கநாதன் சிறுகதைகளைத் தழுவிய நாடகம் நடைபெற்றது. விருதுகள் குறித்து கவிஞர் ஆர்.ராஜகோபாலன் அறிமுகவுரையாற்றினார். நாவலாசிரியர் சோ.தர்மன் நினைவுரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து விருதாளர்கள் குறித்து ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், விமர்சகர் ஜமாலன் ஆகியோர் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பி.என். பிரகாஷ், சுப்பராயன், புஷ்பா சத்தியநாராயணன், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ், நீதிபதி சத்யமூர்த்தி, ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு, இயக்குநர் மிஷ்கின், நீதிபதி மகாதேவனின் மருமகன் கணேஷ், திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத் தலைவர் டி.எஸ். தியாகராஜன், விஜயா பதிப்பகம் வேலாயுதம், கவிஞர் ஜெயபாஸ்கரன், பிருந்தாசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com