விமான நிலைய விரிவாக்கம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோர முடியாது

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் பெற்றுக் கொண்ட பிறகு கூடுதல் இழப்பீடு கோர முடியாது என உயர்நீதிமன்றம்

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் பெற்றுக் கொண்ட பிறகு கூடுதல் இழப்பீடு கோர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மணப்பாக்கம், கோலப்பாக்கம், கெருகம்பாக்கம், தாரப்பாக்கம் கோவூர் உள்ளிட்ட கிராமங்களில் 359 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மணப்பாக்கம் மற்றும் கோலப்பாக்கம் கிராமங்களில் 129 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலங்கள் ஈ.வி.பி. எஸ்டேட்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடாக ரூ.44.41 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் தொகையை முழுமையாகப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் கூடுதல் இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புமாறு சிறப்பு வட்டாட்சியரிடம் மனு அளித்தது. அந்த மனுவை சிறப்பு வட்டாட்சியர் நிராகரித்தார். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சிறப்பு வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து வழக்கை உரிமையியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான முழு இழப்பீட்டுத் தொகையையும் முழு சம்மதத்துடன் பெற்றுக் கொண்டு, இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com