கடிதம் எழுதுதல், அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்': 6 -ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் பங்கேற்கலாம்

பள்ளி மாணவர்களின் கடிதம் எழுதுதல் மற்றும் அஞ்சல்தலை சேகரிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் தலை கண்காட்சி அலுவலகம்
கடிதம் எழுதுதல், அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்': 6 -ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் பங்கேற்கலாம்

பள்ளி மாணவர்களின் கடிதம் எழுதுதல் மற்றும் அஞ்சல்தலை சேகரிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் தலை கண்காட்சி அலுவலகம் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் குறிப்பாக 6 -ஆம் வகுப்பு 9 -ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். மேல்வகுப்பு மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முகாம் நடைபெறும். 
முதல் தொகுதி முகாம் ஏப்ரல் 25 -ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் மே 2 -ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரையிலும், 9 -ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலும் இம்முகாம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து மே 16 -ஆம் தேதி முதல் 18 -ஆம் தேதி வரையிலும், 23 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரையிலும் முகாம் நடத்தப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் இந்த கோடை முகாம் நடைபெறும்.
காட்சிக்கு வைக்கப்படும்: பெற்றோர் தங்கள் குழந்தைகளை முகாமிற்கு தங்கள் சொந்தப் பொறுப்பில் அழைத்து வந்து முகாம் முடிந்ததும் அழைத்துச் செல்ல வேண்டும். முகாமின் முதல் நாளில் குழந்தைகளுக்கு அஞ்சல்தலை சேகரிப்பு முறை குறித்த தகவல்கள், பயிற்சி, அஞ்சல் தலைகள் சேகரித்து ஒட்டி வைக்கும் புத்தகங்களை தயாரிப்பது, அவற்றை காட்சிப்படுத்துவது போன்றவை கற்பிக்கப்படும். மாணவர்கள் தயாரித்த சிறந்த அஞ்சல் தலை புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை ஒரு மாத காலத்திற்கு அண்ணா சாலை தலைமை அஞ்சலகக் கண்காட்சியில் வைக்கப்படும்.
கடிதப் பயிற்சி: முகாமின் இரண்டாவது நாளில் மாணவர்களிடையே கடிதம் எழுதும் திறனை ஊக்குவிக்க தேவையான விவரங்கள் தெரிவிக்கப்படும். பெரும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் எழுதிய கடிதங்கள் குறித்து விவாதிக்கப்படும். 
மாணவர்கள் தங்களது தாத்தா -பாட்டி அல்லது நண்பர்களுக்கு சொந்தமாக கடிதம் எழுதி, அதை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் மூலமாக அனுப்ப வேண்டும்.
அஞ்சலக பணிகள்: மூன்றாவது நாளில் அஞ்சலகத்தில் ஒரு கடிதம் எங்கெங்கெல்லாம் பயணப்படுகிறது என்பதையும், அஞ்சல் பெட்டிகளில் இருந்து கடிதங்களை எடுப்பது, அவற்றை உரியவர்களுக்கு விநியோகிப்பது ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்படும். பணவிடை மூலம் பணம் அனுப்புவது மற்றும் அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட அஞ்சலகத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பள்ளிகளின் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலக அஞ்சல்தலை சேகரிப்பு பிரிவைத் தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பப் படிவங்கள் www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை தலைமை அஞ்சல் அலுவலர் (அஞ்சல்தலை சேகரிப்பு பிரிவு) அண்ணாசாலை தலைமை அஞ்சலகம், சென்னை-600 002.என்ற முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலம் philatelypromotion@gmail.com என்ற முகவரிக்கோ அனுப்பலாம். 
கட்டணம் எவ்வளவு?: ஒவ்வொரு மாணவருக்கும் அஞ்சல் தலை சேகரிப்பு டெபாசிட் கணக்கு மற்றும் பொருள்கள் வழங்குவதற்காக தலா ரூ.150 வசூலிக்கப்படும். முகாமின் முதல் நாளில் இந்தப் பணத்தை அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 -2854 3199, 98847 77096, 98405 95839 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com