திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை அண்ணா நகரில் திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டினார்.
சென்னை அண்ணா நகரில் பெண் மருத்துவரின் 8 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றவரை விரட்டிப் பிடித்த சிறுவன் சூர்யகுமாரை பாராட்டிய, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.
சென்னை அண்ணா நகரில் பெண் மருத்துவரின் 8 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றவரை விரட்டிப் பிடித்த சிறுவன் சூர்யகுமாரை பாராட்டிய, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.

சென்னை அண்ணா நகரில் திருடனை விரட்டிப் பிடித்த சிறுவனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பாராட்டினார்.
அண்ணாநகர் டி பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ஆ.அமுதா (50). மகப்பேறு மருத்துவரான இவர், அங்கு கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இவரது கிளினிக்-குக்கு ஒரு இளைஞர் நோயாளி போல் வந்தார். மருத்துவரிடம் சிகிச்சை பெற, அவரது அறைக்குச் சென்ற அந்த இளைஞர், திடீரென அமுதா அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார். அதிர்ச்சியில் அமுதா சப்தம் போட்டார்.
இதைக் கவனித்த அந்த கிளினிக் எதிரே உள்ள வாகன உதிரி பாகம் விற்கும் கடையில் பணிபுரியும் நா.சூர்யகுமார் என்ற சூர்யா (17) எனும் சிறுவன், அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தார். மேலும் அந்த நபர் வைத்திருந்த தங்கச் சங்கிலியையும் சூர்யா கைப்பற்றினார். பின்னர் அவர், அந்த இளைஞரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். 
போலீஸார் விசாரணையில் அந்த இளைஞர், திருவள்ளூர் மாவட்டம் தர்மபுரம்கண்டிகை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சு.ஜானகிராமன் (26) என்பது தெரிய வந்தது. 
காவல் ஆணையர் பாராட்டு: சிறுவன் சூர்யாவின் அசாத்திய தைரியத்தையும், மன உறுதியையும் அறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன், அச்சிறுவனை வியாழக்கிழமை பாராட்டி, பரிசு வழங்கினார். மேலும் அவர், 'சூர்யாவின் செயல் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. குற்றங்களை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முன் வர வேண்டும். கண்ணெதிரே நடக்கும் குற்றங்களை சூர்யா போன்று பொதுமக்கள் தடுக்க வேண்டும், குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களின் ரகசியங்களை காவல்துறை உறுதியாக பாதுகாக்கும்' என்றார் அவர்.
இதுகுறித்து சூர்யா கூறியது: 
அந்த இளைஞர் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும்போது அதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ஆனால், நான் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தேன். 
இளைஞர் தப்பியோட முயன்றபோது, அவரை கையால் தாக்கினேன். அப்போது அவர் நிலைகுலைந்து மயங்கினார். பின்னர் அவருக்கு தண்ணீர் வாங்கிக் கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தேன் என்றார்.
சிறுவன் சூர்யாவின் செயலை கூடுதல் ஆணையர்கள் எம்.சி.சாரங்கன், எச்.எம்.ஜெயராம், இணை ஆணையர் டி.எஸ். அன்பு உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகளும் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com