மின்விநியோகம் பாதிப்பு: ராயப்பேட்டை மருத்துவமனையில் 2-ஆவது நாளாக அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு

மின்கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை

மின்கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் பிரதான மின்சார கம்பி புதன்கிழமை காலை திடீரென்று எரிந்தது. 
இதனால் மருத்துவமனையில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் மாற்று ஏற்பாடு மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
நோயாளிகள் பாதிப்பு: பழுதான மின்கம்பிகளைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து வியாழக்கிழமையும் நடைபெற்றது. இதனால் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது:
அறுவை சிகிச்சை அரங்குக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் மின்விநியோகத்தில் நிலையற்றத் தன்மை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மருத்துவமனையில் உள்ள அனைத்து அறுவை சிகிச்சைக் கூடங்களையும் சுத்தப்படுத்தி, கிருமி நீக்கும் பணிகள் எல்லா சனிக்கிழமைகளிலும் நடைபெறுவது வழக்கம். அன்றைய நாள்களில் அறுவை சிகிச்சைகள் எதுவும் நடைபெறாது. தற்போது மின்சாரம் தடைபட்டுள்ளதால், அறுவை சிகிச்சை அரங்குகளை சுத்தப்படுத்தும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற இருந்த அறுவைச் சிகிச்சைகள் சனிக்கிழமைக்கு (ஏப். 21) மாற்றி வைக்கப்பட்டுள்ளன. 
மின் வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமைக்குள் மின்சார விநியோகம் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com