நேர்மை, மனிதநேயத்தோடு தீர்ப்பு வழங்கவேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் வலியுறுத்தல்

எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் நேர்மையாகவும், மனித நேயத்தோடும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் வலியுறுத்தினார்.
நேர்மை, மனிதநேயத்தோடு தீர்ப்பு வழங்கவேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் வலியுறுத்தல்

எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் நேர்மையாகவும், மனித நேயத்தோடும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம் வலியுறுத்தினார்.
 அனைத்திந்திய மக்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு கழகத்தின் 6-ஆவது ஆண்டுத் தொடக்க விழா, நீதிபதி எம்.கற்பகவிநாயகம் எழுதிய மனிதநேயத்தின் மீதான தீர்ப்புகள் (பகுதி-6) நூல் வெளியீட்டு விழா ஆகியவை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் கலந்து கொண்டு நூலை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பெற்றுக் கொண்டார்.
 விழாவில் நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேசியது: நாடக நடிகராக இருந்த நான், சினிமாவில் நடிக்க முயன்றபோது, எம்.ஜி.ஆரின் நட்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அரசியலுக்கு வர ஆசைப்பட்டேன். அதற்காக பலமுறை முயன்றேன். நான் அரசியலுக்கு வருவதைவிட, நீதித்துறையில், உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். அவர் நினைத்தபடியே எனக்கு நீதித்துறையில், உயர்ந்த இடம் கிடைத்தது. இறை நம்பிக்கையே இதற்கு காரணம்.
 உயர் பதவி வகிப்பது என்பது முக்கியமல்ல; பதவியில் இருக்கும்போது, என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம்.
 மனிதநேயமிக்க தீர்ப்புகள் வழங்கும்போது பல சோதனைகள் வந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் நேர்மையுடன் செயல்பட்டேன். அதேபோல நீதிபதிகள் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் மனிதநேயத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன்: ஒரு பெண்ணை பத்து பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
 இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம் அதை பத்து ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவிட்டார். தண்டனை குறைப்பது மட்டுமல்ல, அதை உயர்த்துவதும் கூட மனிதநேயம்தான். மனிதநேயமிக்க தீர்ப்புகளை வழங்கி எங்களைப் போன்ற நீதிபதிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் நீதிபதி கற்பகவிநாயகம் என்றார்.
 இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், பி.டி. ஆஷா, நீதிபதிகள் கே.வெங்கட் ராமன், வி.பெரியகருப்பையா, மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி ஆகியோர் எம்.கற்பகவிநாயகம் வழங்கிய சிறந்த தீர்ப்புகள் குறித்தும், நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
 விழாவில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பி.கலைவண்ணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஹெச்.மணிவண்ணன், அனைத்திந்திய மக்கள் உரிமை மற்றும் பாதுகாப்புக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜெயராமன், தலைவர் எம்.சின்ராஜ் உள்பட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com