கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும்  கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகம் முழுவதும்  கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாலி தீர்த்தம் அருகே இருந்த கோயிலை இடித்துவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கும்பகோணம் காபி கடை நடத்துவதாக வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவபாபு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது கடந்த 2014-ஆம் ஆண்டே போலீஸாரிடம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கோயிலை கட்டவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் எம்.மகாராஜா, இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என குற்றம் சாட்டினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்தால் என்ன என கேள்வி எழுப்பினர். மேலும் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் திருவண்ணாமலை கோயில் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக இந்துசமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டனர். 
இதே அமர்வு முன்  விசாரணைக்கு வந்த , ரன்வீர்ஷா மற்றும் கிரண் ராவ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com