தகுதியானவர்களுக்கே ஒப்பந்தங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர்

பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் உரிய விதிகளைப் பின்பற்றி தகுதியானவர்களுக்கே வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் உரிய விதிகளைப் பின்பற்றி தகுதியானவர்களுக்கே வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆணையர் தா.கார்த்திகேயன் பேசியது: 

மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின்கீழ், கடந்த 2009-இல் சென்னை மாநகரின் நான்கு வடிநிலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகளுக்கு ரூ. 20 கோடியிலிருந்து ரூ.100 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. இதில், சிறந்த உபகரணங்களை வைத்துள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டு தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டது. அதேபோல், உலக வங்கி நிதியின்கீழ் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டுவதற்கும் தகுந்த உபகரணங்கள் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டன.

விதியில் திருத்தம்: இதனால், தாங்கள் பாதிக்கப்படுவதாக நடுத்தர ஒப்பந்ததாரர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ரூ. 5 கோடி மதிப்பில் 29 சிறு பணிகளாகப் பிரித்து பலருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஒப்பந்த விதிகள் மேலும் தளர்த்தப்பட்டு நடப்பு ஆண்டு முதல் பெருநகர சென்னை வளர்ச்சித் திட்ட நிதியின்கீழ், மழைநீர் வடிகால் கட்டுவதற்கு 73 சிறு வேலைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.1.33 கோடியிலிருந்து ரூ. 7.95 கோடி வரை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. 

சீர்மிகு நகரத் திட்ட நிதியின்கீழ்,  மழைநீர் வடிகால் கட்டும் பணி 36 -ஆகப் பிரிக்கப்பட்டு ரூ.1.27 கோடியிலிருந்து ரூ. 6.77 கோடி வரை தகுதி நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திலும் சிறிய ஒப்பந்ததாரர்கள் கலந்து கொள்ளும் வகையில் 36-ஆகப் பிரிக்கப்பட்ட பணிகளை மேலும் அதிகப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. 

இதற்கான ஏலம் விரைவில் கோரப்படவுள்ளது. சாலைப் போக்குவரத்து துறை சார்பில் கோரப்படும் ஒப்பந்தங்கள், நகராட்சி நிர்வாகம்,  குடிநீர் வழங்கல் துறையின் அரசாணையின்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல்  கோரப்படுகின்றன.

எனவே, சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்கள் அனைத்தும் மத்திய கண்காணிப்பு ஆணையம், தமிழ்நாடு ஒப்பந்த ஒளிவு மறைவற்ற விதிகள், உலக வங்கி விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்றார்.   இந்த பேட்டியின்போது, துணை ஆணையர்கள் ஆர்.லலிதா, எம்.கோவிந்த ராவ், பி.குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com