சென்னை துறைமுகம்-மணலி கச்சா எண்ணெய் குழாய் பதிக்கும் பணி மார்ச் இறுதிக்குள் நிறைவு

சென்னைத் துறைமுகம்- மணலி சிபிசிஎல் ஆலை இடையே நடைபெற்று வரும் கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்கும் பணி வரும் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன்
எண்ணூர் விரைவு சாலையில் துளையிடுதல் மூலம் பதிக்கப்பட்டு வரும் கச்சா எண்ணெய் குழாய்கள்
எண்ணூர் விரைவு சாலையில் துளையிடுதல் மூலம் பதிக்கப்பட்டு வரும் கச்சா எண்ணெய் குழாய்கள்

சென்னைத் துறைமுகம்- மணலி சிபிசிஎல் ஆலை இடையே நடைபெற்று வரும் கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்கும் பணி வரும் மார்ச் இறுதிக்குள் நிறைவடையும் என இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் துணைப் பொது மேலாளர் மற்றும் திட்ட அதிகாரி எஸ். தங்கராஜ் கூறினார்.
மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு கச்சா எண்ணெய் கொண்டு வர சென்னை துறைமுகத்திலிருந்து காசிமேடு, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை வழியாக பூமிக்கடியிலும், மேல்புறமாகவுமாகவும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 30 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட சுமார் 2.5 அடி விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் அதன் ஆயுள் காலம் முடிந்து சுமார் 18 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. 
இதனால் பல இடங்களில் குழாய்களில் சேதம் ஏற்பட்டு கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த புதிய குழாய்கள் பதிக்கும் பணி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
ரூ.432 கோடியில் திட்டப் பணிகள்: திட்ட நிலவரம் குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவன துணைப் பொது மேலாளர் எஸ். தங்கராஜ் தினமணிக்கு அளித்த பேட்டி: 
மொத்தம் சுமார் 17 கி.மீ. தூரம் கொண்ட இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ. 432 கோடி. புதிய குழாய்கள் 3.5 அடி விட்டம் கொண்டவை. கார்பன் எஃகு இரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இக்குழாய்களின் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் மூன்று அடுக்கு ரசாயனப் பூச்சு செய்யப்படுகிறது. இதனால் துருப்பிடிக்கவோ, வேறு பாதிப்புக்கு உள்ளாகவோ வாய்ப்பு இல்லை.
இதனால் காலவரையின்றி இக்குழாய்களை பயன்பாட்டில் வைத்திருக்க முடியும். 17 கி.மீ. நீளம் கொண்ட குழாய்களில் சுமார் 12 கி.மீ. நீளத்துக்கு பூமிக்கு அடியில் பதிக்கப்பட உள்ளன. இதற்கென கிடைமட்ட திசையில் துளையிடுதல் சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
60 சதவீதப் பணி நிறைவு: எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவு சாலை வழியாகச் செல்லும் இக்குழாய்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் 20 மீட்டர் ஆழத்திலும், திறந்தவெளி பகுதியில் 5 மீட்டர் ஆழத்திலும் பதிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்பணி வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். இதற்கிடையே சேமிப்பு கிடங்குகள், தொழில்நுட்ப நிலையங்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவை வரும் மே மாதத்துக்குள் முழுமையாக நிறைவடையும். இத்திட்டம் நிறைவடையும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 10.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறனை சிபிசிஎல் நிறுவனம் அடையும் என்றார் தங்கராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com