கவனம் ஈர்க்கும் அரங்குகள்

தும்பி அரங்கு: 'பறத்தல் அதனதன் சுதந்திரம்' எனும் தலைப்புடன் அரங்கு முழுவதும் பறபறவென பறக்கும் தும்பிகள் நம் கவனத்தைக் கவர்ந்தது தும்பி என்னும் குழந்தைகளின் மாதஇதழுக்கான அரங்கு. திருவண்ணாமலை
கவனம் ஈர்க்கும் அரங்குகள்

தும்பி அரங்கு: 'பறத்தல் அதனதன் சுதந்திரம்' எனும் தலைப்புடன் அரங்கு முழுவதும் பறபறவென பறக்கும் தும்பிகள் நம் கவனத்தைக் கவர்ந்தது தும்பி என்னும் குழந்தைகளின் மாதஇதழுக்கான அரங்கு. திருவண்ணாமலை மாவட்டத்தின் சிங்காரப்பேட்டை பகுதியில் மாற்றுக் கல்விக்காக உருவாக்கப்பட்ட 'குக்கூ' எனும் பள்ளியின் குழந்தைகளும், தன்னார்வலர்களின் கைவண்ணத்தாலும் இந்த படபடக்கும் தும்பிகளும், கைவினைப் பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில் தமிழ் - ஆங்கிலம் என குழந்தைகளுக்கான மொழி பெயர்ப்பு கதைகளே அதிகம் உள்ளன. மேலும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள மலைவாழ் அரசுப் பள்ளி குழந்தைகளின் புகைப் படங்களும் இந்த அரங்கின் அலங்காரத்தில் தனிச் சிறப்பு. சென்ற ஆண்டு விகடன் சிறுவர்களுக்கான சிறந்த மாத இதழாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தும்பி என்பது குறிப்பிடத்தக்கது. மழலைகளின் மனம் கவரும் அரங்கும் கூட இது.
இயல்வாகை பதிப்பக அரங்கு: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அழகேஸ்வரியின் அரங்கு இது. இயற்கை வாழ்வியலை கண் முன் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் சுரைக் குடுவைகளாலும், காய்ந்த இலைச் சருகுகளாலும், மூங்கில் பொருள்களாலும் அரங்கை அலங்கரித்துள்ளனர். அரங்கினுள் நுழையும்போதே நமக்குள் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இயற்கை வேளாண் சார்ந்த நம்மாழ்வார் புத்தகங்கள், மருந்தில்லா மருத்துவம், இயற்கை உணவு மூலம் நோய்களை விரட்டுவது எப்படி, பனை உணவுகளின் மகத்துவம், இயற்கை காய்கறி - கீரை விதைகள் உள்ளிட்ட இயற்கையுடன் ஒன்றியவைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். பெண்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் அரங்கு இதுவே.
சிம்பல் அரங்கு: திருக்குறள் தொடர்பான அரங்கு இது. திருக்குறளை நவீன தொழில்நுட்பம் மூலம் அதிக அளவு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'புராஜக்ட் - 133' என்ற புதுமையான செயலியை வித்தியாசமான முறையில் ஏ3 பக்க அளவில் திருக்குறள் புத்தகம், அதில் 133 அதிகாரங்களுக்கான ஓவியங்கள், நடைமுறை தமிழில் குறளின் விளக்கங்கள், மேலும் 133 ஓவியங்கள், படைப்போவியங்கள் உள்ளிட்ட திருக்குறள் தொடர்பானவற்றைக் காட்சிப்படுத்தி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றனர். மேலும் திருவள்ளுவர் தினத்தன்று கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்காக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான புத்தகத்தையும் காட்சிப்படுத்த உள்ளனர் என்பது இந்த அரங்குக்கு மேலும் சிறப்பைக் கூட்டவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com