போகி: புகை மண்டலமான சென்னை

போகிப் பண்டிகை மற்றும் பனி மூட்டம் காரணமாக சென்னை நகரம் சனிக்கிழமை புகை மண்டலமாக மாறியது.
போகிப் பண்டிகையொட்டி சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம்  புஷ்பா நகரில் பழையன கழிதல் என்ற அடிப்படையில் தேவையில்லாத பொருள்களை தீயிலிட்டு மேளம் கொட்டிய குழந்தைகள்.
போகிப் பண்டிகையொட்டி சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம்  புஷ்பா நகரில் பழையன கழிதல் என்ற அடிப்படையில் தேவையில்லாத பொருள்களை தீயிலிட்டு மேளம் கொட்டிய குழந்தைகள்.

போகிப் பண்டிகை மற்றும் பனி மூட்டம் காரணமாக சென்னை நகரம் சனிக்கிழமை புகை மண்டலமாக மாறியது. இதனால், ரயில், விமானம் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 
மார்கழி மாதத்தின் இறுதி நாளில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகையின்போது பழைய மற்றும் தேவையற்ற பொருள்களை எரிப்பது வழக்கம். ஆனால், மாசு மற்றும் புகை இல்லாத போகி கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், போகி பண்டிகை நாளில் பொருள்களை எரிக்கும் வழக்கம் தொடர்கிறது. 
சென்னையில் போகி: சனிக்கிழமை போகிப் பண்டிகை சென்னையில் கொண்டாடப்பட்ட போது அதிகாலையில் பழைய பொருள்கள் சேகரித்து எரிக்கப்பட்டன. இதனால் எல்லா இடங்களிலும் புகை சூழ்ந்தது. இத்துடன் மூடு பனியும் சேர்ந்து கொண்டதால், சென்னை நகரம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
மூடு பனி: சென்னையில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த வெப்பநிலை (17 டிகிரி செல்சியஸ்) கடந்த வாரம் பதிவாகியது. அதன்பிறகு, நகரில் லேசான மழை பெய்ததால், பனியின் தாக்கம் குறைந்தது. கடந்த இரு நாள்களாக மீண்டும் பனி அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், போகி பண்டிகையும் மூடு பனியும் சேர்ந்து, சென்னை நகரை புகை மண்டலமாக மாற்றியது. 
அடையாறு, மயிலாப்பூர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு இடங்களில் அதிகமாக புகை சூழ்ந்திருந்தது. சாலைகள் தெரியாத அளவுக்கு புகையும், பனியும் சூழ்ந்ததால் காலை நேரத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர். ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து புறநகருக்குச் செல்லும் மின்சார ரயில்களும், புறநகரில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் தாமதமாகின. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி கூறும்போது, சென்னையில் இருந்து புறநகருக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் சராசரியாக 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை தாமதமாகின. ஒரு சில ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாகின என்றார்.
விமானங்கள் தாமதம்: மூடுபனி காரணமாக, சென்னையில் விமான சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஓடுபாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் சென்னைக்கு வந்த 18 சர்வதேச விமானங்கள் ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com