சாலையோர கடைகள் உரிமத்துக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயம்

சாலையோரங்களில் கடைகள் வைக்க உரிமம் பெற்றவர்கள் மீண்டும் உரிமம் பெறுவதைத் தடுக்க விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையைக் கட்டாயம் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையோரங்களில் கடைகள் வைக்க உரிமம் பெற்றவர்கள் மீண்டும் உரிமம் பெறுவதைத் தடுக்க விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையைக் கட்டாயம் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெய்சங்கர் உள்பட 5 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி கோரி கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் மீது சென்னை மாநகராட்சி விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். 
இந்த வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில், சாலையோர பெட்டிக் கடைகளுக்கு உரிமம் பெற்றவர்கள் அதனை வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர். சென்னையில் உள்ள 629 கடைகளில் 257 கடைகளுக்கு மட்டுமே நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. உரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ள புதிய மனுக்களை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் புதிய மனுக்களை குழுவினரிடம் கொடுக்கவும், அந்த மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தார். மேலும் ஒரு முறை விண்ணப்பித்து உரிமம் பெற்றவர்கள் மீண்டும் உரிமம் பெறுவதைத் தடுக்க விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையைக் கட்டாயமாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார். பள்ளி,கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே கடைகள் வைக்க அனுமதிக்கவோ புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com