தமிழ் அகராதி வரலாற்றில் புதிய நூல்

தமிழ் அகராதி வரலாற்றில் புதிய நூல்

தமிழில் வெளியிடப்படாமல், மறைக்கப்பட்டு அழிந்துபோன நூல்களைத் தேடி எடுத்துப் புதுப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கப்பட்டதுதான் தமிழ்மண் பதிப்பகம். அந்த வகையில் மொழிக்காகத் தன் வாழ்நாளைச் செலவிட்ட தமிழ் அறிஞர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட எண்ணினேன். 
2002-இல் பாவாணரின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பட்டது. அவர், தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கு மூல மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய் மொழி என்பதை வலியுறுத்தியவர். வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதுதான் என் வாழ்நாள் பணி எனச் சொன்னவர். அதனால் பாவாணரின் எல்லா நூல்களையும் தேடிப்பிடித்துத் தொகுத்தேன். இதில் அவர் எழுதிய 52 நூல்கள் கிடைத்தன. அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து , 12, 13- ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தொல்காப்பிய நூல்களைத் தொகுத்தேன். சங்க இலக்கியங்கள், சாமிநாத சர்மாவின் உரைநடை நூல்கள், தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் படைப்புகள், சிலப்பதிகாரம், அகநானூற்றுக்கு உரை எழுதிய நாவலர் ந.மு.வேங்கடசாமியின் நூல்கள் என பல்வேறு நூல்களைத் திரட்டி, பொருள் வழி பிரித்து, காலவரிசைப்படுத்தி தொகுக்கத் தொடங்கினேன்.
அடுத்து, தமிழுக்காக பங்களிப்புச் செய்த அறிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசனின் "பாவேந்தம்', மறைமலையடிகளாரின் "மறைமலையம்', சாமி சிதம்பரனார், மயிலை சீனி வேங்கடசாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களையெல்லாம் ஒன்று திரட்டித் தொகுத்துள்ளேன். இதன் நோக்கமே அடுத்த தலைமுறைக்கு அறிஞர்களின் வரலாறு முழுமையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே.
தற்போது, "செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறோம். இது தமிழ் அகராதி வரலாற்றில் புதுவரவு. இனி யாரும் இது போன்று செய்ய முடியாது.
அடுத்து திராவிட அறிஞர்களில் மூத்த அறிஞராகவும், அறிவு சிந்தனையில் சிறந்தவராகவும் அண்ணாவால் போற்றப்பட்டவருமான பன்மொழியார் அப்பாத்துரையாரின் 97 நூல்களைத் தொகுத்து ஜன. 16 -ஆம் தேதி "அப்பாத்துரையும்' நூலை வெளியிட உள்ளேன். அடுத்து, தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி தலைமையில் இதுவரை யாருமே தொகுக்காத "சங்க இலக்கிய களஞ்சியம்' என்ற நூலை தொகுத்து வெளியிடவுள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com