வாசிப்பின் ருசி அறிந்தால் புத்தகத்தை நேசிக்க முடியும்

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறேன்.
வாசிப்பின் ருசி அறிந்தால் புத்தகத்தை நேசிக்க முடியும்

சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறேன். ஒரு காலத்தில் வாசகர்கள் நூலகங்களைத் தேடிச் சென்றனர். இன்றைக்கு வாசகனை நோக்கி எழுத்தாளரும், பதிப்பாளரும் செல்லும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

41-ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த புத்தகக் காட்சி அதற்கான முயற்சிதான். நம்நாட்டில் செல்லிடப்பேசி இன்றி தற்போது யாரும் இல்லை. ஆனால் ஆண்டுக்கு ரூ.100-க்கு புத்தகம் வாங்குவதற்கு தயங்குகின்றனர். அதுதான் தற்போதைய வாசிப்பின் நிலை.

நான் எழுதவந்த காலக்கட்டத்தில் தமிழ்ப் புத்தகங்கள் 1,200 பிரதிகள் அச்சிட்டனர். 

அப்போது மக்கள் தொகை 3 கோடி. இப்போது மக்கள் தொகை 3 மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஆனால் புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் அச்சாவதற்கு பதில், பிரிண்ட் ஆன் டிமாண்ட் எனப்படும் தேவைக்கேற்ப அச்சிடும் முறையிலான நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டது. 

இதனால் ஒரு நூலை 100-க்கும் குறைவான எண்ணிக்கையில் கூட அச்சிடும் நிலை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு வாசிப்பு நிலை மாறிவிட்டது.

இந்நிலையை மாற்றிடவே, இதுபோன்ற புத்தகக் காட்சிகள் ஏற்படுவதற்குக் காரணம். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில் புத்தகக் காட்சிகளில் மிளகாய் பஜ்ஜிக்கும், டெல்லி அப்பளத்திற்கும் கிடைக்கும் வரவேற்பு புத்தகங்களுக்கு கிடைத்திட செய்ய வேண்டும்.

குழந்தைகளை மாற்ற வேண்டும்: வாசிப்புக்கான தூண்டுதல் இருந்தால்தான் இளைஞர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முடியும். அவ்வகையில் 8-10 வயதை எட்டுகின்ற குழந்தைகள் புத்தகங்களை வாசிக்க பழக்கப்படுத்த வேண்டும்.

அவர்கள் வாசிப்பின் ருசி அறிந்துவிட்டால், புத்தகத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவர். ஆனால் பெற்றோர் குழந்தைகளுக்கான வாசிப்பு பழக்கத்துக்கு பெரும் தடையாக இருக்கிறார்கள். பாடப் புத்தகம் வாசிப்பது மட்டுமே வாசிப்பு என்று நினைக்கின்றனர். ஆனால், பாடப் புத்தகத்துக்கு வெளியில் விரிந்த உலகம் இருக்கிறது. அதை இதுபோன்ற புத்தகக் காட்சிகள் புரிய வைக்கும்.

நாவலுக்கு எதிர்காலம்: நாவலுக்கு பெரிய எதிர்காலம் நிச்சயம் உண்டு. வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறதே, இந்நிலையில் நாவலுக்கு எங்கே எதிர்காலம் இருக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் நாவல்களில் சொல்லக் கூடிய அளவுக்கு சுதந்திரமாக வேறு எந்த தளத்திலும் சொல்லிவிட முடியாது. அதனால் நாவலுக்கு எந்த காலத்திலும் எந்த மொழியிலும் நல்ல எதிர்காலம் உண்டு. 

இலக்கியத்தின் போக்கு: இலக்கியம் என்பது நீதி நூல்கள் சொல்லும் உபதேசம் அல்ல. என்னுடைய அனுபவங்களை சொல்லும்போது அதைப்படிக்கும் வாசகனுக்கு நெருக்கடி காலங்களில் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இலக்கியத்தின் பங்கு பெரும்பாலும் மனித மனங்களைப் பண்படுத்துவதுதான். நல்ல இலக்கியம் வாசிப்பவன் நல்ல மனிதனாகிறான் என்பது இலக்கியத்தின் பண்பும் பயனுமாக நினைக்கிறேன். 

வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள: மனிதனின் மூளைக்கு ஆற்றல் நிறைய உண்டு. அதில் நாம் என்ன விதைக்கிறோமோ அதுவே நாம் அறுவடை செய்கிறோம். புத்தகங்கள் நிறைய படிக்கும்போது அவன் நிறைய விஷயங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொள்கிறான். அறிவு வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும்போதுதான் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com