வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த மக்கள் கூட்டம்

சென்னையில் மாட்டுப் பொங்கல் நாளான திங்கள்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் காலை 8 மணி முதலே வருகை தந்தனர். மாலையில் பூங்காவுக்கு

சென்னையில் மாட்டுப் பொங்கல் நாளான திங்கள்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் காலை 8 மணி முதலே வருகை தந்தனர். மாலையில் பூங்காவுக்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது.
உயிரியல் பூங்காவுக்குள் பொதுமக்கள் வரிசையாகவும், சிரமமின்றியும் செல்ல சவுக்குக் கட்டைகள் மூலம் வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமிகளை அழைத்துச் சென்ற பெற்றோர் நெரிசல் இன்றி பூங்காவுக்குள் செல்ல முடிந்தது. 
பார்வையாளர்கள் வந்த தனியார் பேருந்துகள்,வேன்கள்,கார்கள்,இரு சக்கர வாகனங்களை நிறுத்த பூங்காவுக்கு சற்றுத் தொலைவில் கூடுதலாக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாகனங்களில் வருவோர் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பூங்காவுக்கு வர வசதியாக 4 மினி பேருந்துகளும் இயக்கப்பட்டன.
பெற்றோருடன் வந்த சிறுவர், சிறுமியர் பூங்காவில் இருந்த சிங்கம், புலி, யானை, கரடி, நீர்யானை உள்ளிட்ட விலங்குகளை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்ததோடு, செல்லிடப்பேசியில் படம் எடுத்து மகிழ்ந்தனர். பூங்காவில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பூங்காவைச் சுற்றிலும் 33 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 
பாதுகாப்புப் பணியில் 250 போலீஸாரும், 300 வனத்துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல கல்லூரிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள், தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டினர்.
பூங்காவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வளாகத்தினுள் தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 25 பேர் கொண்ட மருத்துவக் குழு தயார் நிலையில் காத்திருந்தது.
உயிரியல் பூங்காவுக்கு பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை 15 ஆயிரத்து 586 பேர் வந்திருந்தனர். திங்கள்கிழமை மாலை வரை 29 ஆயிரத்து 694 பேர் வருகை தந்துள்ளனர். 
காணும் பொங்கலன்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருவர் என எதிர்பார்ப்பதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com