சென்னை மாநகராட்சி வார்டுகள் மறுவரைவு: கருத்துகள், ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்! மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டுகள் மறுவரைவு மீது கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை எழுத்துப்பூர்வமாக நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சம்மந்தப்பட்ட வட்டார துணை
சென்னை மாநகராட்சி வார்டுகள் மறுவரைவு: கருத்துகள், ஆட்சேபணைகள் தெரிவிக்கலாம்! மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டுகள் மறுவரைவு மீது கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை எழுத்துப்பூர்வமாக நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சம்மந்தப்பட்ட வட்டார துணை ஆணையர்களிடம் தெரிவிக்கலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சென்னை மாநகர விரிவாக்கத்துக்காக, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், வார்டுகளை மாற்றியமைத்தல், உள்கட்டமைப்பு வசதிகளைச் செயல்படுத்துதல் போன்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்ள துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) சிறப்பு அலுவலர் (மறுசீரமைத்தல்) ஆகவும், துணை ஆணையர் (பணிகள்) சிறப்பு அலுவலர் (உள்கட்டமைப்பு) ஆகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது.
அதனடிப்படையில் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி உரிய திருத்தங்கள் வெளியிடப்பட்டு, சமமான மக்கள் தொகை என்ற விதி நீக்கப்பட்டு, மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வருவாய் ஆகிய இனங்களை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டு, வார்டுகளின் எல்லைகள் நிர்ணயம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. 
சென்னை மாநகராட்சியுடன் 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 176 சதுர கி.மீட்டரிலிருந்து 426 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. 
சென்னை மாநகராட்சியில் 176 சதுர கி.மீ. பரப்பளவில் இருந்த 155 வார்டுகள், 107 வார்டுகளாகவும், இணைக்கப்பட்ட 250 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகள் 93 வார்டுகளாகவும் 2011 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டன.
இப்போது தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டம் 23/2017 இன் விதிகளின்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் இப்போதுள்ள 200 வார்டுகளின் எண்ணிக்கை மாறாமலும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும் அனைத்து வார்டுகளுக்கும் இயன்றளவு சமமான மக்கள் தொகை கொண்டும் வார்டுகள் மறுவரையறை செய்ய ஆணையிடப்பட்டது. 
முதல் கட்டமாக மறுவரையறை ஆணைய விதிகளின்படி அனைத்து வார்டுகளுக்கும் சமமான மக்கள் தொகை கொண்டு மறுவரையறை செய்ய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொண்டது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன் அமைந்த சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 107 வார்டுகள், 134 வார்டுகளாகவும், விரிவாக்கத்தின் போது இணைக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 93 வார்டுகள், 66 வார்டுகளாகவும் கணக்கிடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறு அனைத்து வார்டுகளையும் சமமாக மக்கள் தொகை கொண்டதாக அமைக்கும் போது, இணைக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல வார்டுகள் அளவில் மிகப் பெரியதாகவும், விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இருந்த சென்னை மாநகராட்சியின் பகுதிகளில் இப்போது அமைந்துள்ள வார்டுகள் மிகச் சிறியதாகவும் அமையும். 
இந்த முறையில் வார்டுகளை மறுவரையறை செய்யும்பட்சத்தில் அனைத்து வார்டுகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது.
சமமான மக்கள் தொகை என்ற கோட்பாடு சிறிய நகரங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்றாகும். சென்னை போன்ற பலதரப்பட்ட வசதிகள், வாழ்விடங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நகரத்துக்கு பொருந்தாததாகும்.
எனவே, 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டிற்கிடையிலான மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை அடர்த்தி, வார்டு பரப்பளவு மற்றும் 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை அடிப்படைக் காரணிகளாக கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை மேற்கொள்ள வார்டுகளுக்கான மக்கள் தொகையை கீழ்வருமாறு நிர்ணயிக்க தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மண்டலம்-2 (மணலி) மற்றும் மண்டலம்-3 (மாதவரம்) ஆகிய இரண்டு மண்டலங்களுக்கு, ஒரு வார்டுக்கு மக்கள் தொகை 15,000 எனவும், மண்டலம்-1 (திருவொற்றியூர்), மண்டலம்-12 (ஆலந்தூர்), மண்டலம்-14 (பெருங்குடி) மற்றும் மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) ஆகிய நான்கு மண்டலங்களுக்கு, ஒரு வார்டுக்கு மக்கள் தொகை 20,000 எனவும், மண்டலம்-7 (அம்பத்தூர்) மற்றும் மண்டலம்-11 (வளசரவாக்கம்) ஆகிய இரண்டு மண்டலங்களுக்கு, ஒரு வார்டுக்கு மக்கள் தொகை 30,000 எனவும், மண்டலம்-4 (தண்டையார்பேட்டை), மண்டலம்-5 (இராயபுரம்), மண்டலம்-6 (திரு.வி.க. நகர்), மண்டலம்-8 (அண்ணா நகர்), மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு) ஆகிய 7 மண்டலங்களுக்கு ஒரு வார்டுக்கு மக்கள் தொகை 43,000 ஆக கொண்டு வார்டுகள் மறு வரையறை வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. 
இவ்வரைவு மறுவரையறையின் மீது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட வடக்கு/மத்திய/தெற்கு வட்டார துணை ஆணையர்களிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜனவரி 29 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம். 
அதன் பின்னர் ஓரிரு நாட்களில் அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டு, கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகள் குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, மறுவரையறை ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 
வட்டார துணை ஆணையர்களின் முகவரி
1. வட்டார துணை ஆணையர், வடக்கு வட்டார அலுவலகம்,
பேசின் பாலம் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-600 021.
2. வட்டார துணை ஆணையர், மத்திய வட்டார அலுவலகம், 
கதவு எண்.36 பி, 2-வது குறுக்கு தெரு, புல்லா அவின்யூ, 
செனாய் நகர், சென்னை- 600 030.
3. வட்டார துணை ஆணையர், தெற்கு வட்டார அலுவலகம், 
எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, 
சென்னை-600 020.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com