திருக்குறளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டும்: வெ.இறையன்பு

திருக்குறளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டும் என எழுத்தாளர் வெ.இறையன்பு வலியுறுத்தினார். சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:-
திருக்குறளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டும்: வெ.இறையன்பு

திருக்குறளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டும் என எழுத்தாளர் வெ.இறையன்பு வலியுறுத்தினார். சென்னை புத்தகக் காட்சி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் பேசியது:-
நமது மூளையைப் பொருத்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு, நரம்பணு இறந்தால் மீண்டும் வராது என்று கூறினர். ஆனால் இப்போது துடிப்புடனும், படைக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டால் மூளையில் ஞாபக சக்தியை இயக்கக் கூடிய ஹிபோ கேம்பஸ் என்ற பகுதியில் அதிக நரம்பணுக்கள் உருவாகும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். நிறைய படிப்பது, சொற்பொழிவுகள், சங்கீதம் கேட்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் மூளையை அப்படியே வைத்திருக்க முடியும். வயதில் முதுமையாகவும், மூளையை இளமையாகவும் வைத்திருக்க முடியும். 
வாழ்க்கையைக் கற்றுத்தந்த வாசிப்பு: கடந்த 1984-ஆம் ஆண்டு சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் முதன்முறையாக புத்தகக் காட்சிக்காக சென்ற எனக்கு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பேசி வருவதற்கு நான் வாசிக்கும் புத்தகங்கள்தான் காரணம். இலக்கணத்தோடு எழுதவும் சரியாக உச்சரிக்கவும், மொழியை சரளமாக கையாளுவதற்கும் அந்த வாசிப்பு உதவியது. 
சில நூல்களை வாசிப்போடு நிறுத்தி விடுகிறோம்; சிலவற்றை மூளைக்கு எடுத்துச் செல்கிறோம்; சிலவற்றை இதயத்தில் பத்திரப்படுத்துகிறோம். சில நூல்களை வாசித்து, மகிழ்ந்து, சுவைத்து அதோடு விட்டுவிடுவதும் உண்டு. 
இப்படி பல நூல்கள் இருந்தாலும் சில நூல்களை எப்போதும் புரட்டிப் பார்த்து அவற்றில் இருக்கும் அந்த வெளிச்சத்தைக் கண்டு நம்மை நாமே திருத்திக் கொள்கிற அனுபவமும் உண்டு. அப்படிப்பட்ட நூல்களில் தமிழ் இலக்கியத்தில் முதலாவதாக திருக்குறளைக் கூறலாம். 
மாற்றத்தை ஏற்படுத்தும் திருக்குறள்: திருக்குறளை தொடக்கப் பள்ளியிலிருந்து படித்து அதன் மூலம் ஈர்க்கப்பட்டு அதில் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுகள் செய்யும் வரை அது என் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 
திருக்குறளை சாதாரணமாக வாசிப்பது என்பது வேறு; அதை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது என்பது வேறு. திருக்குறளில் எத்தனையோ உரைகள் இருக்கலாம். ஆனால் அதை வாசித்து நாம் நமக்கான உரையை எழுதுவதுதான் முக்கியம். அதை நாம் எப்படி நாம் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப் போகிறோம் என்பதுதான் நாம் நமக்காக எழுதும் உரையாகவும் இருக்க முடியும். 
நான் திருக்குறளை இன்றும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன். சில நூல்களை வாசித்து முடித்து விட்டேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவை நம்மை உருவாக்கும் நூலாக இருக்காது. தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருப்பதுதான் நூல்களுக்கான இலக்கணம் என்றார். இந்த நிகழ்வில் வேலைவாய்ப்பு, பயிற்சி இயக்குநர் என்.சுப்பையன், வழக்குரைஞர் க.சுமதி, பபாசி தலைவர் வயிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை புத்தகக் காட்சி 10-ஆம் நாள் நிகழ்வில் பேசுகிறார் புள்ளியியல் துறை முதன்மைச்செயலர் வெ.இறையன்பு. உடன் (இடமிருந்து) பபாசி நிரந்தர உறுப்பினர் பி.என்.சிவக்குமார், வழக்குரைஞர் சுமதி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் என்.சுப்பையன், பபாசி தலைவர் வயிரவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com