கருணை மதிப்பெண் விவகாரம்: அரசு எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க முடியுமா?

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க வேண்டிய விவகாரத்தில், கலந்தாய்வில் ஏற்கெனவே இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
கருணை மதிப்பெண் விவகாரம்: அரசு எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க முடியுமா?

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க வேண்டிய விவகாரத்தில், கலந்தாய்வில் ஏற்கெனவே இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிரம்பிய இடங்கள்: தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையிலான முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இவற்றில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 127, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3501எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன. இதுதவிர அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களும், சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 68 இடங்களும் நிரம்பின. தற்போது தனியார் கல்லூரிகளில் 669 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. 
நீதிமன்ற உத்தரவு: நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. மேலும் புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து மாணவர் சேர்க்கை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு, தமிழகக் கலந்தாய்வு என அனைத்து நடைமுறைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்பட்சத்தில் அது நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து மாணவர் சேர்க்கையையும் பாதிக்கும் என்பதால் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மேல்முறையீடு செய்யும் என்று கூறப்படுகிறது.
கலக்கத்தில் மாணவர்கள்: நீதிமன்ற உத்தரவு தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அதே நேரத்தில், ஏற்கெனவே முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் தங்கள் இடங்கள் பறிபோகுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 13 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் இடங்கள்: இதன் காரணமாக, நீதிமன்ற உத்தரவையேற்று புதிய தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து மாணவர் சேர்க்கை நடத்தும் பட்சத்தில் ஏற்கெனவே இடங்களைப் பெற்ற மாணவர்களின் இடங்கள் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
144 மாணவர்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உடனடியாக இடங்களை அதிகரிப்பது சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் இதுபோன்று நடைபெற்ற சம்பவத்தையும் சுட்டிக் காட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூரில் இயங்கி வந்த தனியார் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) ரத்து செய்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 2016-2017-ஆம் கல்வியாண்டில் அந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
19 கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்: அதன் அடிப்படையில் அந்தக் கல்லூரியில் படித்த 144 மாணவர்களுக்கும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் மார்ச் 6-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது. 155 மாணவர்களில் 87 பேர் மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படித்து வந்தனர், மீதமுள்ள மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் படித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் அளிக்கப்பட்டது. 
அதிகபட்ச மாணவர் தொகையைக் கொண்டுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி தவிர, மீதம் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு இந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டு, தற்போது படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர்.
எனவே, இதே போன்று கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரத்திலும் கூடுதல் இடங்களை உருவாக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறுகையில், "ஏற்கெனவே தனியார் கல்லூரி மாணவர்கள் 144 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்திலும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் அனுமதி அளித்தால் கூடுதல் இடங்களை உருவாக்கி மாணவர்களைச் சேர்க்க முடியும். 
ஆனால், அதிக மாணவர்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு, வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் ஏற்படும். அத்தகைய சூழலில் அளவுக்கு அதிகமான மாணவர்களைச் சேர்ப்பதால் கல்வியின் தரம் குறித்து உறுதி அளிக்க முடியாது' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com