அடுக்குமாடி குடியிருப்பில் வியாபாரி எரித்துக் கொலை

சென்னை ஆலந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வியாபாரி கத்தியால் குத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆலந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வியாபாரி கத்தியால் குத்தப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் முகம்மது சுல்தான் (40). இவர், சென்னை ஆலந்தூர் எம்.கே.என். சாலை 2-ஆவது சந்தில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டரை ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தார். சுல்தான், ரியல் எஸ்டேட் தொழிலும், மொத்தமாக எல்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்கி சென்னை ரிச்சி தெருவில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிவதை அங்குள்ள பொதுமக்கள் பார்த்தனர். உடனே அவர்கள், ஜன்னல் வழியாக அந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிஷம் போராட்டத்துக்கு பின்னர், தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
வியாபாரி எரித்துக் கொலை: தகவலறிந்து அங்கு வந்த பரங்கிமலை போலீஸார், அந்த வீட்டுக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டுக்குள் சுல்தான் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு, கை, கால்கள் கட்டப்பட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்தனர்.
இதையடுத்து சுல்தானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுல்தானை கொலை செய்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டது. இக் கொலை குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com